

பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட நாட்டின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' பாதியில் வழியில் இன்று நின்றது. இதனால், பயணிகள் இறக்கி விடப்பட்டு வேறு ரயிலில் அனுப்பப்பட்டனர்.
பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை தயாரித்தது. ரயிலில் இன்ஜின் இல்லாமல் அதிவேகமாக இயங்கக்கூடிய இந்த ரயிலுக்கு வந்தே பாரத் எனப் பெயரிபட்டது.
டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் நேற்று தொடங்கியது. முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டு 16 பெட்டிகளைக் கொணடு வந்தே பாரத் ரயில் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகள் அனைத்திலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களின் வருகை குறித்து தகவல் தெரிவிக்கும் வசதியும், வை-பை வசதியும் இந்த ரயிலில் உள்ளன. நவீன தொழில்நுட்பத்திலான கழிப்பறை, ஒவ்வொரு இருக்கைக்குக்கும் தனித்தனி மின் விளக்கு வசதி, ஒவ்வொரு பெட்டியிலும் குளிர்பான வசதிகள் என ரயில் முழுவதும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக வாரணாசி சென்றடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்தது. அப்போது, டெல்லிக்கு முன்பாக 200 கி.மீ. தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் ரயில் பழுதடைந்து நின்றது. இந்தப் பழுதுக்கான காரணம் என்ன என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயிலை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க முடியாமல் நின்றது. மேலும், பெட்டிகளில் மின்சாரம் செல்வதிலும் தடை ஏற்பட்டது.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "வந்தே பாரத் ரயில் டெல்லிக்கு முன்பாக 200 கி.மீ. தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் வந்தபோது, பழுது ஏற்பட்டு நின்றது. இன்று அதிகாலை 5 மணி அளவில் ரயிலில் உள்ள சில பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் சாம்ரோலா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயிலை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க முடியவில்லை. இதனால் 10 கி.மீ. வேகத்தில் ரயில் மெதுவாக இயக்கப்பட்டு ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ரயிலில் இருந்து புகையும், கருகிய நெடியும் வந்தது. பிரேக் சிஸ்டம் பழுதடைந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, அனைத்துப் பயணிகளும் வேறு ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் போது, ரயிலில் இருந்து பலத்த சத்தம் எழுந்ததால், இது பிரேக் பழுது என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது" எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான அனைத்து டிக்கெட்டுகளின் முன்பதிவு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் கோளாறால், நாளை ரயில் இயக்குவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.