

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேச கட்சி நிர்வாகிகள், எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று சந்தித்து மனு அளித்தனர்.
ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து இருந்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்பதால், பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களையும், எதிர்ப்பையும் சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தி வருகிறார்.
ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி ஆந்திரா பவனில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பாஜக கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள சிவசேனாவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தது.
இந்தநிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து சந்திரபாபு நாயுடு மனு அளித்தார். அவருடன் தெலுங்குதேச கட்சி எம்.பி.க்களும் உடன் சென்றனர்.
முன்னதாக ஆந்திர பவனில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை வரை தெலுங்குதேச நிர்வாகிகள், சந்திரபாபு நாயுடு தலைமையில் ஊர்வலமாக வந்தனர். தெலுங்குதேச கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மேல்சபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.