உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் நூல் ஜேஎன்யு பல்கலை.யில் வெளியீடு

உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் நூல் ஜேஎன்யு பல்கலை.யில் வெளியீடு
Updated on
1 min read

டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) 'உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்' எனும் நூல் இன்று வெளியிடப்பட்டது. இந்நூல் ஜேஎன்யுவில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.  

மத்தியப் பல்கலைக்கழகமான அதன் தமிழ்ப் பிரிவின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பேராசிரியர் எச்.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தலைமை உரையாற்றிய அவர் திருக்குறளின் கருத்துகளோடு ஒன்றி வரும் இந்திய மொழிக் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி உரையாற்றினார்.

தனது உரையில் பேராசிரியர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:

''ஒருவர் உனக்குத் தீங்கிழைத்தாலும் அவனுக்கு நன்மை செய்யும் அளவு பொறுமைசாலியாக வேண்டும் என்பதை 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' எனத் திருவள்ளுவர் சுட்டுகிறார்.

இதே கருத்தை கபீர், 'உன் பாதையில் முட்களைப் பரப்பினானா! அவனது பாதையில் மலர்களைப் பரப்புவாய்' என மொழிகிறார். 'கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமும் மூன்றும் உடைத்து' எனும் குறள் பெண்ணின் பார்வையில் கூற்றுவனின் மரணத்தாக்கமும், கருணையின் பொழிவும், பெண்மானின் நாணமும் இருப்பதாகக்  கூறுகிறது.

இந்தி கவிஞர் ரஹீமும் பெண்ணின் கண்களை வர்ணிக்கையில் 'வெண்படலம் கருவிழி ஓரத்தில் இளஞ்செம்மை இம்மூன்று நிறங்களுடனும் திகழும் அக்கண்கள் வாழ்வின் அமுதத்தையும் மரணத்தின் ஆலகாலவிசத்தையும் மதுவின் போதையையும் தருகின்றன' என்கிறார்.

இவர்களுக்கும், திருவள்ளுவருக்கும் கால வேற்றுமை இருப்பினும் திருவள்ளுவரை இவர்கள் அறிந்திருக்கவில்லை. எனினும் இந்திய மொழிகளில் இடையே சிந்தனையில் ஒற்றுமை காணப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று பழமொழிகள், நீதிக்கதைகள் எல்லாம் வாய்மொழிப் பாடல்களாகவே காலதேசம் கடந்து சஞ்சாரம் செய்வது. மற்றொன்று கலாச்சாரப் பிணைப்பு காரணமாக சிந்தனையில் ஒற்றுமை காணப்படுவது''.

இவ்வாறு பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்நூலை வெளியிட்ட ஊடகவியலாளர் மாலன்  சிறப்புரை ஆற்றினார். இதில், மொழிபெயர்ப்பு பற்றிய கருத்துகளை அவர் எடுத்துரைத்தார்.

இது குறித்து மாலன் பேசியதாவது:

''தமிழில் இருந்து நேரடியாக மணிப்புரி, நேபாளி, பஞ்சாபி போன்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. ஒரு படைப்பு தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கோ அல்லது இந்திக்கோ மொழி பெயர்த்த பின்னரே அது பிற மொழிகளுக்குச் செல்கிறது.

தமிழ், உலக மொழிகளுக்கு இடையேயான மொழி பெயர்ப்பும் ஆகும். ஆங்கிலம்-பிரெஞ்சு தவிர்த்து  மொழிபெயர்ப்பில் மூல மொழியில் என்ன இருக்கிறதோ அதையே பின்பற்ற வேண்டும். மேலைக் கோட்பாடு. நம்முடைய கீழைக் கோட்பாடு மொழிபெயர்ப்பாளனும் தன் திறமைகளை அதில் வெளிக்காட்டலாம்.

இதற்கு சிறந்த உதாரணம் கம்ப ராமாயணம். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் பல மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. திருக்குறளை மொழிபெயர்த்தவர்கள் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் 'ஏன் மொழிபெயர்த்தேன்?' என்பதற்குக் கூறும் விளக்கங்களில் முரண் இருக்கிறது.

இருப்பினும் அவரவர் பார்வையில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே முதன்மையான ஒன்றாகும்''.

இவ்வாறு மாலன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in