Published : 17 Feb 2019 09:47 PM
Last Updated : 17 Feb 2019 09:47 PM

‘‘காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை அசாம் மாநிலத்துக்கு வர விடமாட்டோம்’’ - அமித் ஷா பேச்சு

காஷ்மீர் மாநிலம் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது போன்ற நிலை அசாம் மாநிலத்துக்கு வர அனுமதிக்க மாட்டோம் என பாஜக தலைவர் அமித் ஷா பேசினார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு இருதினங்களுக்கு முன்பு துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.

இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி, ‘‘காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் மிக மோசமான செயலைச் செய்து விட்டார்கள். வீரர்களின் தியாகம் வீண் போகாது. ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தலைவிதி இனிமேல் ராணுவத்தால் தீர்மானிக்கப்படும்’’ எனக் கூறினார்.

இந்தநிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘ஜவர்ஹலால் நேரு, இந்தியா, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல், காந்தி, வருங்காலத்தில் உள்ள பெயரை நான் குறிப்பிடவில்லை.காங்கிரஸ் தொண்டர்கள் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியாது.

இதுபோன்ற கட்சிகளால் நாட்டின் ஜனநாயத்தை வளர்த்து, அதற்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. உள் ஜனநாயகம் இல்லாதபோது, எப்படி நாட்டின் ஜனநாயத்தை வலிமைப் படுத்த முடியும்.

ஒரேயோரு குடும்பம் பட்டும் 55 வருடம் நாட்டை ஆண்டுள்ளது. ஆனால், நாடு அடைந்தது என்ன. காஷ்மீர் மாநிலத்தில் இன்று நிலவும் நிலையை பார்த்து தேசமே கண்ணீர் வடிக்கிறது. தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின் பிடியில் அந்த மாநிலம் சிக்கித் தவிக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் சக்திகள் நாசவேலையில் ஈடுபடுகிறது. அதுபோன்றே அசாம் மாநிலத்தில் வங்கதேசத்தவர்கள் ஊடுருவி நாசவேலைகளை செய்கின்றனர். இதற்காக தான் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. காஷ்மீருக்கு வந்த நிலை, அசாம் மாநிலத்துக்கு வர அனுமதிக்க மாட்டோம்’’ என அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x