

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று நடைபெற உள்ள விசாரணையின்போது ஜெயலலிதா சார்பில் நாட்டின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி (91) ஆஜராக உள்ளார்.
உச்ச நீதிமன்றம், பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வழக்குகளில் ஆஜராகி கர்ஜிப்பார். ஒரு வழக்கில் ராம் ஜெத்மலானி ஆஜராகிறார் என் றால் அவருடைய வாதங்கள் வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும்.
புகழ்பெற்ற வழக்கறிஞராகக் கருதப்படும் ராம் ஜெத்மலானி, பாஜக தலைமையிலான முந்தைய அரசில் சட்ட அமைச் சராக இருந்துள்ளார். அதேபோல பார் கவுன்சிலின் தலைவர் பதவி உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவராகவும் இருந்து வருகிறார். சர்ச்சைக்குரிய வழக்கு களிலும், பிரபலங்களின் வழக்கு களிலும் தொடர்ந்து ஆஜராகி வரும் ராம் ஜெத்மலானி, தனது அபார வாதத் திறமையினால் எதிர்வாதிகளை வீழ்த்தும் வல்லமை பெற்றவர். கடந்த 2011-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்ட னையை நிறுத்துவதற்குக் கார ணமாக இருந்தார்.
அப்சல் குரு தூக்கு தண்டனை ரத்து, மும்பையை கலக்கிய நிழல் உலக தாதா ஹாஜி மஸ்தான் வழக்கு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கு ஆகியற்றில் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதேபோல போலி என்கவுன்ட்டர் வழக்கில் இப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கும், சுரங்க ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூராப்பவுக்கும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கும் ஜாமீன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
எனவே ஜெயலலிதாவுக்கும் இந்த வழக்கில் ஜாமீன் வாங்கித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.