Last Updated : 10 Feb, 2019 02:28 PM

 

Published : 10 Feb 2019 02:28 PM
Last Updated : 10 Feb 2019 02:28 PM

சொந்த மாமனார் என்.டி. ராமாராவின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு நாயுடு: பிரதமர் மோடி சாடல்

சொந்த மாமனார் என்.டி. ராமாராவின் முதுகில் குத்திய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவைக் கொள்ளையடித்து, மகனை வளர்க்கப் பார்க்கிறார் என்று பிரதமர் மோடி காட்டமாக விமர்சித்தார்.

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். விஜயவாடாவில் இரு பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களை நாட்டுக்காகப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டிவரும் தெலங்குதேசம் கட்சி, பிரதமர் மோடி வருகைக்கு இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியது.

இந்நிலையில், குண்டூர் நகரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''ஆந்திர மாநிலத்தை காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்றத்தான் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் கட்சி தொடங்கினார். அப்போது டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களை உதாசினப்படுத்தியது. அதனால், காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்ற புதிய கட்சியை என்டிஆர் தொடங்கினார். காங்கிரஸின் அகங்காரத்தையும் என்டி ஆர் அடக்கினார். ஆனால், அவரின் அடியைப் பின்பற்றி கட்சிக்கு வந்ததாகக் கூறும் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரை அரசியலில் மூத்தவர் சந்திரபாபு நாயுடுதான். எப்படி என்றால், தேர்தலில் தோல்வி அடைவது, கூட்டணி மாறுவது, மாமனாரை முதுகில் குத்துவது போன்றவற்றில் என்னைக் காட்டிலும் சந்திரபாபு நாயுடு சீனியர். இதில் அவர் சீனியர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சந்திரபாபு நாயுடு  சீனியர் என்பதால், ஒருபோதும் நான் மரியாதைக் குறைவாக நடந்தது இல்லை.

மறைந்த முதல்வர் என்டிஆர் வழியைப் பின்பற்றி ஆட்சி செய்கிறேன் என்று கூறுகிறார் சந்திரபாபு நாயுடு. ஆனால், அதன்படி அவர் வாழ்கிறாரா?

நாட்டின் காவல்காரனாகிய என்னுடைய செயல்பாடு நாயுடுவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது. அதனால்தான் ஆந்திராவுக்கு நாங்கள் அளித்த ஒவ்வொரு பைசாவின் கணக்கையும் கேட்கிறார்.

நாங்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த வாக்குறுதியைக் காட்டிலும் அதிகமான நல்ல விஷங்களும், நிதியும் அளித்துவிட்டோம்.

ஆந்திராவில் புதிய சூரியன் உதிக்கும் என்று உறுதியளித்துவிட்டு, இப்போது தன்னுடை மகன் என்.லோகேஷ் வளர்ச்சிக்கு ஆந்திராவைக் கொள்ளையடிக்கிறார். அமராவதியை மறுசீரமைப்பு செய்து, மேம்படுத்துவேன் என்று உறுதியளித்துவிட்டு, சொந்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் சந்திரபாபு நாயுடு.

ஏழைகளுக்காக எந்தவிதமான திட்டங்களையும் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கவில்லை. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துத் திட்டங்களையும் தன்னுடைய பெயரைக் கூறி மக்களிடம் அறிமுகப்படுத்திவிட்டார்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x