

பிஹாரில் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ள மிகவும் பழமை வாய்ந்த நாளந்தா பல்கலை கழகத்துக்கு நிதிஉதவி அளிக்க பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி எட்டு நூற்றுண்டுகள் அதாவது 12-ம் நூற்றாண்டு வரை நாளந்தா செயல்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் 800 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கி உள்ளது.
நாளந்தா பல்கலைக்கழகத்துடன் தொடக்க காலத்தில் புத்த சமயத்தினருக்கு நெருக்கமான உறவு இருந்தது. இதன் அடிப்படையில் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ள இந்த பல்கலைக்கழகத் துக்கு புத்த மதத்தினர் அதிகம் உள்ள ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து நிதியுதவிகள் வரத் தொடங்கி உள்ளன.
இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “இதுவரை இல்லாத வகையில் நாளந்தாவுக்கு நிதி உதவி அளிக்க இருப்பதாக, தொடக்க நாளிலேயே இந்திய தூதர் மூலம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தகவல் அனுப்பியுள்ளார். சிங்கப்பூரும் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட ஆஸ்திரேலிய அரசும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது” என்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டில் பிஹார் வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நாளந்தாவை மீண்டும் தொடங்கு மாறு யோசனை தெரிவித்தார். அதன் பிறகு நடைபெற்ற கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் சீனா, ஜப்பான், இந்தியா, சிங்கப்பூர் உட்பட 12 நாடுகள் இணைந்து நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் தொடங்குவது என முடிவு எடுத்தன. இதன் அடிப்படையில் கடந்த 2008-ல் நடைபெற்ற கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் நாளந்தாவை தொடங்கும் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மேலும் பல நாடுகள் நிதியுதவி அளிக்க முன்வந்தன.
எனினும், நாளந்தாவுக்காக திட்டமிடப்பட்டுள்ள 500 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இதுவரை, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே நிதியாக பெறப் பட்டுள்ளன. இதில், 2010-ல் இந்தியா வந்த சீனா அதிபர் ஒரு மில்லியன் டாலரை வழங்கினார். இதனுடன் மத்திய அரசு சார்பில் நாளந்தாவுக்காக ரூ. 2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள நாளந்தா, புத்த சமயத்தினர் வசிக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், வெளிநாட்டு பல்கலைகழகமாக இருந்த போதிலும் நாளந்தாவுக்கு இதுவரை இல்லாத வகையில் நிதியுதவி வழங்குவதற்கு அவர் கள் போட்டி போடுவதாகக் கூறப்படுகிறது.
முதல் துணைவேந்தர் தமிழர்
கி.பி ஐந்தாம் நூற்றாண் டில் தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றி யவர் ஒரு தமிழர் என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. கி.பி 607-ல் ஹர்ஷர்வர்தனர் ஆட்சியின் போது நாளந்தாவை பார்வையிட வந்த தர்மபாலர் துணைவேந்தராக அமர்த்தப்பட்டார். பிரபல வரலாற்றாசிரியர்கள் தங்களது ஆய்வில் இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளனர்.
இப்போது பட்டப்படிப்புக ளுக்கான வரலாற்று நூல்களில், “காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னரிடம் அமைச்சராக இருந்தவரது மகன் தர்மபாலர். மண முடித்து வைக்க தந்தை எண்ணியபோது தர்மபாலர், பவுத்த மதத்தைத் தழுவி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அப்போது அவருடன் இந்து மத அறிஞர்கள் கவுசாம்பியில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தனது பேச்சு வல்லமை மற்றும் அறிவுத்திறனால் வெற்றி பெற்றுள்ளார். இதனால், தர்மபாலர் நாளந்தாவின் முதல் துணைவேந்தராக அமர்த்தப்பட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றிய குறிப்புகளை, அவரது மாணவர்களில் ஒருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியருமான வஜ்ரபோதியிடம் நாளந்தாவில் தங்கி கல்வி பயின்ற சீனப்பயணியான யுவாங் சுவாங், தனது சியுக்கி நூலில் எழுதி யுள்ளதாகவும் அந்த வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.