

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு வாரத்திற்குமுன் கடத்தப்பட்ட இரட்டைக் குழந்தைகள் யமுனை ஆற்றில் பிணமாக மிதந்துகொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்தியப் பிரதேச மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து சித்திரகூட் நகரின் நயாகாவோன் காவல்நிலை பொறுப்பு அதிகாரி கே.பி.திரிபாதி தெரிவித்த விவரம்:
பிப்ரவரி 12 அன்று பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரட்டைக் குழந்தைகள் சித்திரகூட் நகரில் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டனர். பேருந்திலிருந்து குழந்தைகளைக் கடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
கடத்தக்கொல்லப்பட்ட அக்குழந்தைகள் இருவரும் எண்ணெய் வியாபாரி பிரிஜேஷ் ராவத் என்பவரின் குழந்தைகள் ஆவர். இவர்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள்.
இச்சம்பவத்திற்குப் பிறகு குழந்தைகளை கடத்திச் சென்றவர்கள் பின்னர் எண்ணெய் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதன் பின்னர், கடத்தல்காரர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசளிப்பதாக காவல்துறை அறிவித்தது. ஆனால் ஒருவாரம் ஆனநிலையில் இவ்வழக்கில் எந்தவித முன்னேள்ளமும் இல்லாதிருந்தது.
இந்நிலையில் இக்குழந்தைகள் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பண்டா மாவட்டத்தில் பாபேரு கிராமம் அருகே யமுனா ஆற்றில் பிணமான நிலையில் மிதந்துகொண்டிருந்தது நேற்றிரவு (சனிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டது.
ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட இரு உடல்களையும் உடற்கூறு பரிசோதனைக்காக பண்டாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இரட்டைக் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம்
இதற்கிடையில் குழந்தைகள் இறந்த செய்தி பரவிய சிறிது நேரத்தில் சித்திரகூட் நகரின் கடைகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடும்படி உள்ளூர் மக்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் சாலைகளில் சிலர் டயர்களை கொளுத்திப் போட்டதோடு பல இடங்களிலும் தனியார் சொத்துக்களை உடைத்து சேதம் விளைவித்தனர்.
பின்னர் மக்கள் கிளர்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அங்கு கூடுதலாக காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சித்திரகூட் நகரின் காவல்நிலைய அதிகாரி திரிபாதி தெரிவித்தார்.
சித்திரகூட், இரு மாநிலங்களுக்கும் எல்லையோர நகரமாக இருப்பதால் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் இரு மாநிலங்களிலும் இவ்வழக்கு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
குழந்தைகள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சித்ரகூட் தாம் (கர்வி) மாவட்டத்தில் ராம்காட் பகுதியில். அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக நான்கு கி.மீ., தூரத்தில் பயணம் செய்தனர். சம்பவத்திற்குப் பிறகு சத்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கவுர் தெரிவித்தார்.
சித்ரகூட் மற்றும் சித்ரகூட் தாம் ஆகியவை அருகருகே உள்ள இரு வெவ்வேறு நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.