

செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, தி இந்து ஆங்கிலத்தில் வெளிவந்த என்.ராம் கட்டுரையை முன்வைத்து ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியது:
இன்று தி இந்து ஆங்கிலம் தெள்ளத் தெளிவாக்கி விட்டது. பிரதமர் அலுவலகமும் இணைபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. நாட்டின் இளைஞர்களிடத்தில் நான் முறையீடு செய்கிறேன். உங்கள் பணம் ரூ.30,000 கோடியை பிரதமர் களவாடியிருக்கிறார். நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன் நண்பருக்குப் பணம் கொடுத்துள்ளார்.
இதற்காக கூட்டுநாடாளுமன்ற கமிட்டியை நாங்கள் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அனில் அம்பானி பெயரை பிரதமர் கூறியதாக பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே தெரிவித்துவிட்டார். விமானப்படையில் உள்ள என் நண்பர்களே, இந்தப் பணம் உங்கள் பாதுகாப்புக்குப் பயன்படுத்தியிருக்கப் பட வேண்டியது. அல்லது உங்கள் குடும்பங்களுக்காக பயன்படுத்தியிருக்கலாம். பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒரு விஷயத்தைத் தன் கைப்பட எழுதுகிறார் என்றால் அதற்கான காரணத்துடன் தான் செய்திருப்பார். பிரதமர் அலுவலகம் தங்களை பின்னுக்குத் தள்ளி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்கிறார். அனில் அம்பானியின் பிரதிநிதிதான் பிரதமர்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கேள்விக்குரியதே. உச்ச நீதிமன்றத்திடம் இந்த ஆவணங்கள் இல்லை. அவர்கள் கோர்ட்டில் பொய் பேசியுள்ளனர். தங்களிடம் ஆவணம் இருந்திருந்தால் உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை அளித்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ராபர்ட் வத்ரா, சிதம்பரத்துக்கு எதிராக சட்டத்தைப் பயன்படுத்துங்கள், பிரச்சினையில்லை. ஆனால் ரஃபேல் குறித்தும் பதிலளியுங்கள். கடுமையான வார்த்தைகள் எனக்குப் பிடிக்காது, ஆனாலும் உண்மையைக் கூறித்தானே ஆகவேண்டும். இப்போது நாட்டுக்கு பிரதமர் ஒரு கயவர் என்பதை கூறியாக வேண்டிய நேரம்.
இவ்வாறு கூறினார் ராகுல் காந்தி.