Last Updated : 18 Feb, 2019 07:39 AM

 

Published : 18 Feb 2019 07:39 AM
Last Updated : 18 Feb 2019 07:39 AM

சவப்பெட்டி ஊழலை போல ரஃபேலும் நீர்த்துப் போகும்- அதிமுக எம்.பி. மைத்ரேயன் சிறப்பு பேட்டி

கடந்த 2004 மக்களவைத் தேர்தலின்போது பாஜக மீது காங்கிரஸ் எழுப்பிய சவப்பெட்டி ஊழலை போல ரஃபேல் விவகாரமும் நீர்த்துப் போகும் என மாநிலங்களவை அதிமுக எம்.பி. டாக்டர் எம்.மைத்ரேயன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் ‘இந்து தமிழ்’ நாளிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி பின்வருமாறு:

மத்திய அரசின் சாதனையாக நீங்கள் கருதுவது?

உலக நாடுகள் பலவற்றுக்கும் பிரதமர் மோடி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் காரணமாக, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தனி மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் பாதிப்புகள் இருப்பினும், கிடைத்த லாபம் அதிகம். ரூ.5 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கும் சாதனையே. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் அறிவிப்பும் சிறப்பானது.

அதிமுக எம்.பி.க்களின் சாதனை என்ன?

அதிமுக எம்.பி.க்களின் தொடர் வற்புறுத்தலின் காரணமாகவே, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஜிஎஸ்டியின் குறைகளை சரிசெய்யவும், தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி ஒதுக்கீடு மற்றும் நிலுவைத் தொகையை பெறவும் இரு அவைகளிலும் வலியுறுத்தினோம்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மீதான அதிமுக நிலைப்பாடு எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது?

இந்த விஷயத்தில், ஜெயலலிதா வகுத்த தெளிவான பாதையை பின்பற்றி வருகிறோம். நாட்டு நலன் தொடர்பான விவகாரத்தில் ஆதரவும், தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும்பட்சத்தில், மத்திய அரசை எதிர்த்தும் வருகிறோம்.

அதிமுக-பாஜக கூட்டணி உருவாகுமா? உருவாகாதா?

முன்பு உருவான பாஜக - அதிமுக கூட்டணியின் பல்வேறு அம்சங்களை நான் கண்டுள்ளேன். ஜெயலலிதாவை பொறுத்தவரை, தனிநபர் நட்பு என்பது வேறு. கட்சியின் கொள்கை என்பது வேறு. இதனால்தான், 2009, 2014-ல் பாஜகவுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. இதேபோல், இன்றைய சூழலிலும் எங்கள் தலைவர்கள் ஒரு நல்ல முடிவுடன் வலுவான வெற்றி கூட்டணி அமைப்பார்கள். இதில் தனிநபர் விருப்பங்களை கருத்தில் எடுப்பது தவறாகி விடும்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் நல்லது?

இதுகுறித்து தனிப்பட்ட முறையில் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.

தமிழக பாஜக தலைவர்களால்தான் நீங்கள் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறதே?

பாஜகவின் மாநில பொதுச்செயலளராக இருந்த எனக்கு, ஜெயலலிதாவுடன் நல்ல புரிந்துணர்வு தொடர்பு கிடைத்தது. பாஜக-அதிமுக கூட்டணிக்கு இடையே பாலமாகவும் செயல்பட்டேன். இந்தக் கூட்டணி 1999-ல் முறிந்த பின்னர், திமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பேசியது எனக்கு நெருடலாக இருந்தது. எனது இந்த மன உளைச்சலை ஜெயலலிதா புரிந்து கொண்டார். பின்னர், அவர் கேட்டுக்கொண்டதன் காரணமாகவே, அதிமுகவில் இணைந்தேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உங்களை பயன்படுத்திய அளவுக்கு தற்போதைய தலைமை பயன்படுத்துகிறதா?

கவிஞர் மு.மேத்தா எழுதியதில் எனக்கு பிடித்த கவிதையை இதற்கு பதிலாக அளிக்கிறேன். ‘என் கால்களில் சற்று வலி ஏற்படும்போது, நான் சிறிது இளைப்பாறுகிறேன். அது ஓய்வெடுப்பதற்காக தானே தவிர, ஓய்ந்து போவதற்கு அல்ல.’

உங்கள் தலைமை மீது முகநூலில் அதிருப்தி காட்டும் நீங்கள், மீண்டும் பாஜகவுக்கு திரும்ப முயற்சிப்பதாக கூறப்படுவது உண்மையா?

’அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்ற எனது பதிவு மன ஆதங்கத்தை கூறும் இந்தப் பதிவு, தலைமைக்கு எதிரானது அல்ல. ஜெயலலிதா மீதான பற்றினால் அதிமுகவுக்கு வந்த நான், மீண்டும் பாஜகவில் சேருவேன் என்ற சிந்தனையே தவறானது.

கடந்த மாதம் பிரதமரை நீங்கள் தனியாக சந்தித்தபோது பேசியது என்ன?

 ‘இந்து தமிழ்’ நாளிதழில் திருப்பாவை தொடர்பாக நான் எழுதிய தொடர், நூலாக வெளியானது. அதன் பிரதியை பிரதமரிடம் அளித்து ஆசிபெற அவரை சந்தித்தேன்.

அதிமுகவில் மூன்றாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யான முதல் நபர் நீங்கள். உங்களுக்கு மீண்டும் எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைக்குமா? மக்களவைக்கு நீங்கள் போட்டியிட விரும்புவது ஏன்?

இந்த பதவி மீண்டும் கிடைக்குமா என்பது மக்களவைத் தேர்தலுக்கு பிறகே தெரியும். எனினும், அதை எதிர்பார்க்காமல், மக்களவைத் தேர்தலுக்காக தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் அளித்துள்ளேன்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தின் இறுதியில் சவப்பெட்டி ஊழலை காங்கிரஸ் எழுப்பியது. தற்போது, மோடி ஆட்சியின் இறுதியில், ரஃபேல் விவகாரத்தை அக்கட்சி எழுப்புவதை எப்படி பார்க்கிறீர்கள்? இதற்கு அதிமுக ஆதரவளிக்காமல் இருப்பது ஏன்?

காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக இல்லை. எனவே, அக்கட்சி எழுப்பும் பிரச்னைகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் இல்லை. 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி, சவப்பெட்டி ஊழல் விவகாரத்தால் அல்ல. மேலும், அந்த ஊழல் குற்றச்சாட்டு இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. இதேபோல், தற்போது காங்கிரஸ் எழுப்பும் ரஃபேல் ஊழலும் நீர்த்துப் போகும்.

தமிழக அரசியலுக்கு வந்துள்ள கமல், வருவதாக கூறும் ரஜினி ஆகியோர் குறித்து உங்கள் கருத்து என்ன?

அரசியல் வானில் பல மின்மினிப் பூச்சிகள் வரும். ஆனால், நிலைப்பது கடினம். ரஜினி இன்னும் அரசியல் களத்தில் இறங்காததால் அவர் மீது கருத்து கூறுவது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x