

குஜராத்தில் உள்ள உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்துவைத்தார். இச்சிலையைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென்று சிறப்பு ரயில் பயணம் மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒற்றுமை சிலை என அழைக்கப்படும் இச்சிலையைக் காண வருபவர்களின் வசதிக்காக இயக்கப்படும் இச்சிறப்பு ரயில் மூலம் அப்பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களையும் காணலாம்.
பாரத் தர்ஷண் சுற்றுலா திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் செல்லும் சுற்றுலாப் பயணம் 7 இரவுகள் மற்றும் 8 நாட்களையும் உள்ளடக்கியதாகும்..
சண்டிகரில் இருந்து தொடங்கும் இப்பயணம், உஜ்ஜனையில் உள்ள மஹாகலேஷ்வர் ஜோதிர்லிங்கா, இந்தூரில் உள்ள ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கா, ஷீர்டி சாய்பாபா தரிசனம், நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வர் ஆலயம், அவுரங்காபாத்தில் உள்ள கிருஷ்ணேஷ்வர் ஜோதிர்லிங்கா போன்ற புனித தலங்களை உள்ளடக்கியது.
இச்சுற்றுலாவை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்போரேஷன் லிமிடெட் ஐஆர்சிடிசி நடத்துகிறது. தனிநபர் ஒருவருக்கு ரூ.7560 வீதம் இதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில ரயில் நிலையங்களைத் தவிர பல ரயில்நிலையங்களின் அருகே பல்வேறு இடங்களில் தங்கிச் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சண்டிகர், அம்பாலா, குருஷேத்ரா, கர்னால், பானிபட், டெல்லி கண்டொட்மெண்ட், ரிவாரி, அல்வார் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு என்று வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் இரும்புமனிதரான சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இப்பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நர்மதா அணைக்கு முன்னால் 'சாதுபேட்' என்று அழைக்கப்படும் ஆற்று தீவில் இச்சிலை அமைந்துள்ளது. இச்சிலையின் உயரம் 182 மீட்டர். இறுதியில் வதோதரா நிலையத்தில் ரயில் நிறுத்தப்படும். அதன்பிறகு பயணிகள் வல்லபாய் படேல் சிலைக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இப்பயணத்தில் நான்-ஏசி ஸ்லீப்பர் பெட்டியும், இரவுகளில் கூடம்/ஓய்வறைகள் உள்ளடங்கிய இரவு தங்குமிடங்களும், காலையில் புத்துணர்ச்சியாக்கிக்கொள்ளவும், சாலைப் போக்குவரத்து, சுத்த சைவ சாப்பாடு, நான் நான்-ஏசியில் பயணித்தபடியே இயற்கைக் காட்சிகளை கண்டுசெல்ல/வும், பயணிகளுக்கு உதவ சுற்றுலா மேலாளர் மற்றும் பாதுகாவல் ஏற்பாடுகளும் உள்ளன.
இச்சுற்றுலாவில் பயணம் செய்ய Www.irctctourism.com அல்லது Bharat Darshan இணைப்பின்கீழ் IRCTC மொபைல் ஆப் ஆகியஇணைய தளங்களில் சென்று ஆன்லைனில் பதிவு செய்யலாம்.