Published : 01 Feb 2019 11:27 AM
Last Updated : 01 Feb 2019 11:27 AM

காவல் நிலையத்தில் விநாயகர் கோயில்: கிராமத்தினர் சொல்லும் காரணங்கள்

 

குறைவான மழை, தொழிலில் தோல்வி, விபத்துகள் ஆகியவற்றில் இருந்து கிராம மக்களைப் பாதுகாக்கும் வகையில், கேரள தந்திரி ஒருவர் அளித்த ஆலோசனையின் பேரில் காவல் நிலையத்துக்குள் விநாயகர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

 

இந்தக் கோயில் கர்நாடகாவின் சிக்மங்களூரு மாவட்டத்தில் உள்ள கோனிபீடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற சிலை நிர்மாணிப்பு விழாவில், கோனிபீடு காவல்துறையினரும் சுற்றுவட்டார காவல்நிலைய போலீஸாரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

கிராமத்தில் உள்ள 8,500 மக்களும் கோயில் எழுப்ப நிதியுதவி செய்துள்ளனர். போலீஸாரின் அனுமதியோடு இந்தக் கோயில் கட்டப்பட்டிருந்தாலும் மதச்சார்பற்ற இடத்தில் மதச்சின்னம் எழுப்பக் கூடாது எனவும் சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

 

கிராமத்தில் உள்ள 'விநாயக கெலியரா பாலகா' அமைப்பு இந்தக் கோயில் கட்டுவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய அந்த அமைப்பின் கவுரவத் தலைவர் ரகு, ''அனைத்து சாதி மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் நிதியுதவியும் கட்டுமானப் பொருட்களையும் அளித்தனர். கோனிபீடு கிராமத்தைச் சேர்ந்த வணிகர் மொகமது அலி, லைட்டிங் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார்.

 

புற்று இருந்த இடம்

இப்போது கோயில் எழுப்பப்பட்டுள்ள இடத்தில் ஆதிகாலத்தில் புற்று இருந்தது. உள்ளூர் மக்கள் அந்த இடத்தை வழிபட்டு வந்தனர். கிராம பஞ்சாயத்து அந்த இடத்தை காவல் நிலையத்துக்கு அளித்தது. காவல் நிலையத்தின் சுற்றுச்சுவர்கள் எழுப்ப்பட்ட பிறகு,  புற்றைப் பொதுமக்கள் வழிபடுவது நின்றுபோனது.

 

ஆண்டுகள் செல்லச்செல்ல மழை குறைந்தது. கிராம மக்களின் தொழில்கள் நசிந்தன. விபத்துகள் அதிகரித்தன. புற்றை வழிபடாததுதான் இவற்றுக்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்தோம். கிராமத்தாரின் ஆலோசனையின்பேரில் கேரளாவில் இருந்தி தந்திரி ஒருவரை அழைத்து வந்தோம். அவர் புற்று இருந்த இடத்தில் விநாயகர் கோயில் எழுப்பி வழிபடச் சொன்னார். அதனால் கோயில் கட்டப்பட்டது'' என்றார்.

 

இதனிடையே சிருங்கேரியைச் சேர்ந்த ஏ.வி.கெளசிக் என்பவர், ''மதச்சார்பற்ற இடமான காவல் நிலையத்தில் கோயில் கட்டக்கூடாது'' என்று கட்டணம் தெரிவித்தார்.

 

சிக்மங்களூரு எஸ்பி ஹரிஷ் பாண்டே, நீண்ட காலமாக உள்ளூர் மக்கள் வழிபட்ட இடம் என்பதால் அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x