Published : 14 Feb 2019 03:42 PM
Last Updated : 14 Feb 2019 03:42 PM

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுப்பு: கேஜ்ரிவால் தகவல்

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் ஏறக்குறைய மறுத்து விட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இறங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் டெல்லியில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சியி தலைவர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 15 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸூடனும், டெல்லியில் ஆம் ஆத்மியுடனும் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஆனால் இதில் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

டெல்லியில் இருகட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. எங்கள் முடிவை ஏற்க காங்கிரஸ் தயங்குகிறது. இதனால் பாஜக பலம் பெறும் சூழல் உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்

இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x