ஐ.நா.சபையில் இந்தியில் பேசுகிறார் பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்

ஐ.நா.சபையில் இந்தியில் பேசுகிறார் பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பேரவையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் உரையாற்றுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தி திவாஸை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் கூறும்போது, ஐநா பேரவையில் இந்தி மொழியில் முதன் முதலாகப் பேசிய பிரதமர் வாஜ்பாயி என்றார்.

”நான் ஒரு அமைச்சராக ஐ.நா. சபையில் ஒருமுறை இந்தியில் உரையாற்றியுள்ளேன். இப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் சொற்பொழிவாற்றவுள்ளார். மேலும் அயல்நாட்டு பிரமுகர்களை சந்திக்கும்போதும் பிரதமர் இந்தி மொழியிலேயே உரையாடுவார்.” என்று கூறிய ராஜ்நாத் சிங் பேச்சிற்கு பலமாக கரகோஷம் எழுப்பப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி என்பதால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இந்த நிகழ்ச்சியின் போது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 27ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபையில் பிரதமர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நாட்டில் 55% மக்கள் தொகையினர் இந்தியில் பேசுகின்றனர் என்றும் 85 முதல் 90% மக்கள் இந்தி மொழியை தாய்மொழியாகக் கொள்ளாவிடினும் புரிந்துகொள்கின்றனர் என்றார் ராஜ்நாத் சிங்.

பாலகங்காதர திலகர், ஷியாம பிரசாத் முகர்ஜி, மகாத்மா காந்தி, கோபாலசுவாமி ஐயங்கார் ஆகியோரும் தங்கள் தாய்மொழி வேறாக இருந்தாலும் இந்தி மொழியைப் பரப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்து வந்தனர் என்றார் அவர்.

அதாவது, “இந்தியாவின் பொது மொழி இந்தி” என்றார் ராஜ்நாத். மேலும் சமஸ்கிருத மொழி அனைத்து இந்திய மொழிகளின் தாய் இந்தி உள்ளிட்ட பிற பிராந்திய மொழிகள் அதன் சகோதரிகள் என்றும் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in