

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் லேத்போரா பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 34 பேர் பலியாகியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
“புல்வாமா சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவானது, கோழைத்தனமானது, இந்த தாக்குதலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். நம் தீரமான வீர்ர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீணாகாது” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் தோள் கொடுப்பார்கள். காயமடைந்த வீரர்கள் வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கண்டன/அஞ்சலி செய்தியில், “சிஆர்பிஎப் ஜவான்களின் உயிர்களைக் குடித்த பயங்கரவாதத் தாக்குதல் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. கடுமையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய சோகமான தருணத்தில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கிறோம், அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்” என்று கூறியுள்ளது.