

சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து பிரபல பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான வினித் நாராயண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசு, சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை மே 9- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும்போது, மத்திய ஊழல் கண்காணிப்புக் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அந்த குழு பரிந்துரைக்கும் நபரையே நியமிக்க வேண்டும்.
சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவி நியமனம் குறித்த குழு, அர்ச்சனா ராமசுந்தரத்தின் பெயரை பரிந்துரைக்கவில்லை. மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.கே.பச்னானந்தா பெயரை பரிந்துரைத்தது. அவரது பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்,” என்று வினித் நாராயண் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு குறித்து வினித் நாராயண் கூறியதாவது: அர்ச்சனா ராமசுந்தரம் என்கிற தனிநபரின் நியமனம் பற்றி நான் கவலைப்படவில்லை. சிபிஐ அமைப்பில் அரசியல் தலையீடு கூடாது என்பதற்காகவே பொது நல வழக்கு தொடர்ந்தேன். சிறப்பு குழு மூலம் உயர் பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்படுவதற்கு நான் காரணமாக இருந்தேன்.
அந்த தீர்ப்பு இந்த விவகாரத்தில் மீறப்பட்டுள்ளது. இதை அனுமதித்தால், இதுபோன்ற சட்ட விரோத நியமனங்கள் தொடர வாய்ப்பு ஏற்படும்.அதனால் வழக்கு தொடர்ந்தேன். இவ்வாறு வினித் நாராயண் கூறினார்.