

அமெரிக்க நிறுவனமான சிக் சாயர் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் பிப்ரவரி 12ம் தேதியன்று SIG 716 வகை நவீன ரக ரைஃபிள்கள் வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விரைவுக் கொள்முதல் அடிப்படையில் 72,400 நவீன ரைபில்களை வாங்க அமெரிக்க நிறுவனமான சிக் சாயருடன் பிப்ரவரி 12ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி, 2018-ல் பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் 72,400 ரைபில்கள், 93,895 கார்பைன்கள் (சிறு ஆட்டமேடிக் ரைபில்) வாங்க அனுமதி அளித்தது. இதன் உத்தேச தொகை ரூ.3,547 கோடி. பெரிய ரைபில்கள் 7.63மிமீ, கார்பைன்கள் 5.56 மிமீ அளவு கொண்டதாகும்.
இந்த 72,400 ரைபில்களில் ராணுவத்திற்கு 66,400, கடற்படையினருக்கு 2000, இந்திய விமானப்படையினருக்கு 4000 துப்பாக்கிகளும் வழங்கப்படுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தான தேதியிலிருந்து 12 மாதங்களில் ஒட்டுமொத்த ரைபில்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடும்.