

கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று கூறும்போது, “கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மய மாக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 2015-ல் 3-ம் கட்டப் பணிகளும் 2016-ல் 4-வது கட்டப் பணிகளும் நிறைவு பெறும்.
இப்பணிகளை தாமதப்படும் நோக்கம் எனது துறைக்கு இல்லை. கிராமப்புற மக்களும் டிஜிட்டில் ஒளிபரப்பை பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஊடகம் மற்றும் கேளிக்கை துறையில் மிகப்பெரிய வளர்ச் சிக்கு வாய்ப்புள்ளது. இத்துறை யில் தற்போது ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட் டுள்ளது. 2020-ல் இந்த முதலீடு இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கும்.
அகில இந்திய வானொலி ஒலிபரப்பு மற்றும் தூர்தர்ஷன் ஒளிபரப்பு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவற்றின் சிறந்த நிகழ்ச்சிகள் இணைக்கப்பட்டு, புதிய பெயரில் மொபைல் அப்ளிகேஷன்களிலும் தரப்படும்.
பண்பலை வானொலியில் செய்தி
பண்பலை வானொலி சேவையில் 3-வது கட்டமாக 294 நகரங்களில் 839 புதிய வானொலி நிலையங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் வரும் டிசம்பருக்கு முன் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். தனியார் பண்பலை வானொலிகளுக்கு செய்திகள் ஒலிபரப்பும் உரிமை தரப்படும். முதல்கட்டமாக இவர்கள் அகில இந்திய வானொலி செய்திகளை ஒலிபரப்பலாம். இதற்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம்” என்றார்.
இலவச செய்தி எஸ்எம்எஸ்
அகில இந்திய வானொலியின் இலவச செய்தி எஸ்எம்எஸ் சேவையை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே ஆங்கிலத்தில் இலவச செய்தி எஸ்எம்எஸ் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தி, மராத்தி, சமஸ் கிருதம், டோக்ரி, நேபாளி ஆகிய 5 மொழிகளில் இச்சேவை தொடங் கப்பட்டுள்ளது.