

ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் முந்தைய காங்கிரஸ் அரசு கையெ ழுத்திட்ட ஒப்பந்தத்தைவிட, பாஜக அரசின் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விலை 3 சதவீதம் குறைவானது என சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சியின் போது, இந்திய விமானப் படைக்காக 126 ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புதிதாக பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு 36 விமானங்களை மட்டும் வாங்க புதிய ஒப்பந்தம் செய்தது. இதில், பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டதாகவும், முறைகேடு நடந்துள்ளதாகவும் காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமை யாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர் பான மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி யின் அறிக்கை (சிஏஜி) நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த 2007-ல் ரஃபேல் போர் விமானம் (பறக்கும் நிலையில்) வாங்கு வதற்காக, காங்கிரஸ் அரசு கையெழுத் திட்ட ஒப்பந்தத்தைவிட, என்டிஏ அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் குறிப் பிடப்பட்டுள்ள விலை 2.86 சதவீதம் குறைவாக உள்ளது என கூறப்பட்டுள் ளது. எனினும், விலை விவரத்தை தெரிவிக்கவில்லை.
குறிப்பாக, இந்தியாவுக்கு ஏற்ற படி சிறப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களை (India Specific Enhancements) பார்க்கும்போது என்டிஏ அரசின் ஒப்பந்தம் 17.08% விலை மலிவாக உள்ளது. அதேநேரம், பொறியியல் அம்சங்களுடன் கூடிய தொகுப்பு மற்றும் செயல்பாடு அடிப்படையிலான தளவாடங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது என்டிஏ ஒப்பந்தத்தில் 6.54% விலை அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பறக்கும் நிலையிலான விமானங் களுக்கு யுபிஏ அரசு வழங்க முன்வந்த விலையைவிட என்டிஏ அரசு வழங்கும் விலை 9 சதவீதம் குறைவாக உள்ளது என்ற பாதுகாப்பு அமைச்சகத்தின் வாதத்தை சிஏஜி நிராகரித்துள்ளது.
யுபிஏ ஆட்சியின்போது இந்த ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தர வாதம் (sovereign guarantee) தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்க மறுத்தது பிரான்ஸ் அரசு. இதை என்டிஏ அரசு ஒப்புக் கொண்டது. அதற்கு பதில் Letter of Comfort முறையை ஏற்றுக் கொண்டது. இதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை. அதாவது ஒப்பந்தத்தை தஸ்ஸோ மீறினால் முதலில் தீர்ப்பாயத்தை நாட வேண்டும். பிரான்ஸ் அரசை நாட முடியாது.
மேலும் இந்த ஒப்பந்தப்படி, தஸ்ஸோ நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையை நிர்வகிக்க பிரான்ஸ் அரசு ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என இந்திய பாதுகாப்புத் துறை வலியுறுத்தியது. விமானங்கள் சரியாக சப்ளை செய்யப்பட்டால், அந்தத் தொகை படிப்படியாக இந்தியாவின் ஒப்புதலுடன் தஸ்ஸோ நிறுவனத்துக்கு விடுவிக்கப்படும். ஆனால் பிரான்ஸ் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
விமானங்களை ஒப்படைப்பதற்கான கால அளவு இரு அரசுகளின் ஒப்பந்தத் திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் உள்ளது. யுபிஏ அரசின் ஒப்பந்தப்படி, 18 விமானங்களை 50 மாதத்துக்குள்ளும் அடுத்த 18 விமானங்களை 72 மாதத் துக்குள்ளும் ஒப்படைக்க ஒப்புக்கொள் ளப்பட்டது.
என்டிஏ அரசின் ஒப்பந்தப்படி, முதல் 18 விமானங்கள் 36 முதல் 53 மாதங்களிலும் மற்ற 18 விமானங்கள் 67 மாதங்களுக்குள்ளும் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
யுபிஏ அரசின்போது, ஒட்டுமொத்த ஒப்பந்த மதிப்பில் 15 சதவீதம் வங்கி உத்தரவாதம் உட்பட 25 சதவீத தொகைக்கு செயல்பாடு மற்றும் நிதி உத்தரவாதம் வழங்க தஸ்ஸோ நிறுவனம் ஒப்புக்கொண்டது.
ஆனால், என்டிஏ அரசின் ஒப்பந்தத்தில் இதுபோன்ற உத்தரவாதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது தஸ்ஸோ நிறுவனத்துக்கு சாதகமான அம்சம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.