Last Updated : 12 Feb, 2019 03:10 PM

 

Published : 12 Feb 2019 03:10 PM
Last Updated : 12 Feb 2019 03:10 PM

மோடியின் நேர்மை மீது குற்றம்கூறி ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றைப் பூசிக்கொண்டுள்ளார்: ரவிசங்கர் பிரசாத் ஆவேசம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியின் நேர்மையின் மீது குற்றம்கூறி ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றைப் பூசியுள்ளார் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து இன்று ஊடகங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது, " ரஃபேல் ஒப்பந்தம் கையொப்பம் ஆவதற்கு முன்பே தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தெரிந்துவிட்டது. அனில் அம்பானியின் இடைத்தரகர் போல் செயல்படுகிறார் மோடி. ரகசிய காப்பு சட்டத்தை மீறிய பிரதமரை சிறையில் தள்ள வேண்டும் " எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு எதிராக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு வெட்கமற்றது. பொறுப்பற்றதனத்தின் உச்சம். ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸின் மின்அஞ்சலை ராகுல் காந்தி கையில் வைத்து பேசுகிறார்.

ஒரு நிறுவனத்தின் உள்நிர்வாகம் தொடர்பான மின்அஞ்சல் நகல் ராகுல் காந்திக்கு கிடைத்தது என்பதைக் கூற வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ராகுல் காந்தி பேரம் பேசியுள்ளது தெரியவருகிறது.

பிரதமர் மோடி ராஜதுரோகம் செய்துவிட்டார் என்று ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. எங்களுடைய கட்சிக்கும், தலைவர்களுக்கும், இந்திரா காந்தி குடும்பத்தில் வந்த பிரதமர்களுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

பலமர்மமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கூட கையொப்பமாகி இருக்கிறது. ஆனால், நாங்கள் ஒருபோதும் யாரையும் ராஜதுரோகம் என்று குற்றம்சாட்டியதில்லை.

பிரதமர் மோடி போன்ற நேர்மையான பிரதமர் மீது குற்றம்சாட்டி, ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார். விரைவில் மக்களிடம் உண்மையை வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x