ராபர்ட் வதேரா மொராதாபாத் தொகுதியில் போட்டி? - காங்கிரஸ் போஸ்டரால் பரபரப்பு

ராபர்ட் வதேரா மொராதாபாத் தொகுதியில் போட்டி? - காங்கிரஸ் போஸ்டரால் பரபரப்பு
Updated on
1 min read

மக்கள்  சேவைக்கு அர்பணிக்க விரும்புவதாக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ள நிலையில் அவரை போட்டியிட வருமாறு மொராதாபாத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

லண்டனில் முறைகேடாக சொத்துகள் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கடந்த ஒரு வாரமாக டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்களில் அவர் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், நேற்று தமது முகநூல் பக்கத்தில் ராபர்ட் வதேரா சில கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக பிரச்சாரத்திலும், மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளேன். இதில், என்னால் இயன்ற வரையில், மக்களுக்கு சில நன்மைகளையும் செய்திருக்கிறேன். இது, மக்களிடத்தில் எனக்கு அன்பையும், மரியாதையையும் பெற்று தந்துள்ளது. இந்த அனுபவங்களை நான் வீணடிக்க விரும்பவில்லை. எனவே, எனக்கு எதிரான வழக்குகள் முடிந்ததும், மக்கள் பணிக்கு என்னை அர்ப்பணிப்பேன்’’ எனக் கூறியுள்ளார்.

இந்த பதிவின் மூலமாக, தாம் அரசியலுக்கு வரவுள்ளதையே ராபர்ட் வதேரா உணர்த்துவதாக பரவலாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ராபர்ட் வதேராவின் மனைவியும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்காவுக்கு அண்மையில்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ராபர்ட் வதேராவின் அரசியல் ஆர்வத்தை  தொடர்ந்து, அவரை உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட வருமாறு அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்து விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மொராதாபாத் முழுவதும் ராபர்ட் வதேராவுக்கு வரவேற்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் தேர்தல் களத்துக்கு வரும் இளந் தலைவரே வருக என தலைப்பிட்டு, வதேராவின் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ராபர்ட் வதேரா அரசியலில் ஈடுபட முன்னோட்டம் பார்ப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. மொராதாபாத் தொகுதியில் 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் சர்வேஷ் குமார் சிங் இந்த தொகுதியில் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in