Published : 06 Feb 2019 07:39 AM
Last Updated : 06 Feb 2019 07:39 AM

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு: கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை; தர்ணாவை நிறைவு செய்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் கடந்த 3 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தனது போராட்டத்தை நிறைவு செய்தார்.

மேற்குவங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா சிட்பண்ட் குழுமம் ரூ.4,000 கோடி வரை மோசடி செய் தது. இந்த மோசடியால் சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதேபோல ரோஸ் வேலி சிட்பண்ட் குழுமத்தின் ரூ.17,000 கோடி மோசடியால் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இரு மோசடிகள் தொடர்பாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேற்குவங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு இந்த மோசடிகளில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர்கள் சிலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிட் பண்ட் மோசடி வழக்குகளை மேற்கு வங்க போலீஸார் விசாரித்தபோது முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இந்த விவகாரத்தில் தற்போது கொல்கத்தா காவல் ஆணையராக உள்ள ராஜீவ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக விசாரிக்க கடந்த 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றபோது மாநில போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆணையருக்கு ஆதரவாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மேற்குவங்க அரசு சார்பில் மூத்த வழக் கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார். அவர் கூறியபோது, "கடந்த 5 ஆண்டுகளில் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப் படவில்லை. தற்போது அரசியல் உள் நோக்கத்தில் சிபிஐ ஏவிவிடப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

சிபிஐ தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதாடினார். அவர் கூறியபோது, "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆணையரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் எவ்வாறு தடுக்கலாம்? இது நீதிமன்ற அவமதிப்பு" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், "கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். அவரை கைது செய்யக்கூடாது" என்று உத்தரவிட்டார்.

டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் அனுமதி கோரப் பட்டது. இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, "மேகாலயா தலைநகர் ஷில்லாங் கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நிர்ணயிக்கப்படும் தேதியில் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும்" என்று தெரிவித்தார்.

வழக்கின் அடுத்த விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் சிபிஐ குற்றச்சாட்டுக்கு வரும் 18-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மேற்குவங்க தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவர், கொல்கத்தா காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மம்தாவின் தர்ணா நிறைவு

முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று 3-வது நாளாக கொல்கத்தாவில் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது: எவ்வித நோட்டீஸும் இல்லாமல் கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய சிபிஐ ரகசிய நடவடிக்கையில் இறங்கியது. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் பாஜக மூத்த தலைவரும் அசாம் துணை முதல்வருமான ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கும் தொடர்பிருக்கிறது. அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தாதது ஏன்?

ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்யக்கூடாது. ஷில்லாங்கில் மட்டுமே விசாரணை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனை வரவேற்கிறோம்.

எங்களுக்கு சாதகமாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தர்ணாவை கைவிடுகிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரும் 8-ம் தேதி வரை தர்ணா வில் ஈடுபடுவேன் என்று மம்தா அறிவித் திருந்தார். ஆனால் நேற்றே அவர் தர்ணாவை நிறைவு செய்தார்.

சந்திரபாபு நாயுடு சந்திப்பு

திமுக எம்பி கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேற்று முன்தினம் கொல்கத்தாவுக்கு சென்று முதல்வர் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கொல்கத்தாவுக்கு சென்று மம்தாவுக்கு ஆதரவாகப் பேசினார். இதனிடையே, நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக ஆணையர் ராஜீவ் குமார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் மேற்குவங்க அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமளி

சாரதா சிட்பண்ட் விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நேற்று அமளி ஏற்பட்டது.

மக்களவை நேற்று கூடியதும் திரிணமூல் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில் அவை கூடியதும் சமாஜ் வாதி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் பிற்பகல் 4 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது திரிணமூல் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையிலும் சாரதா சிட் பண்ட் விவகாரம் எதிரொலித்தது. அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி யில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x