இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா? - ராணுவம் திட்டவட்ட மறுப்பு

இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா? -  ராணுவம் திட்டவட்ட மறுப்பு
Updated on
1 min read

இந்திய விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிய நிலையில் இதனை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.

இதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் ஒரு விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், அதில் இருந்த விமானி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.

ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து கூறுகையில் ‘‘பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் இந்திய விமானம் சேதமடைந்ததாக கூறுவது தவறானது. இதில் துளியும் உண்மை இல்லை. அப்படி எந்த ஒரு தாக்குதலையும் பாகிஸ்தான் நடத்தவில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்திய எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in