Published : 11 Feb 2019 01:02 PM
Last Updated : 11 Feb 2019 01:02 PM

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: மீண்டும் வழிபாடு நடத்த கனகதுர்கா, பிந்து கோரிக்கையால் பதற்றம்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைக்காக நாளை மாலை திறக்கப்படுகிறது. மீண்டும் வழிபாடு நடத்த கனகதுர்கா மற்றும் பிந்து ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. கடந்த மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதன் பின்னர், கனக துர்கா தனது வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் இருந்த கனக துர்காவின் மாமியாருக்கும், கனகதுர்காவுக்கும் தகராறு ஏற்பட்டது. கனக துர்காவின் மாமியாரும், கணவரும் அவரை வீ்ட்டுக்குள் சேர்க்க முடியாது எனக் கூறி வெளியேற்றி விட்டனர். இதனால் பெண்கள் பாதுகாப்பு  இல்லத்தில் அவர் தங்கினார். இதையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் வீட்டுக்கு செல்ல உத்தரவிடக்கோரியும் கனக துர்கா உள்ளூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் வீட்டுக்குச் செல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது  எனக்கூறி உத்தரவு பிறப்பித்து, போலீஸார் பாதுகாப்பும் வழங்கியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து அவர் தனது கணவர் வீட்டுக்குச் சென்றார். ஆனால் கனக துர்காவின் கணவர் தனது குழந்தைகளையும், தனது தாயையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இந்த சூழலில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்போது மீண்டும் தரிசனம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கனக துர்காவும், பிந்துவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் காலை பூஜைகள் தொடங்க சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 17-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

சபரிமலை கோயிலுக்கு மீண்டும் செல்ல பிந்துவும், கனகதுர்காவும் அனுமதி கோரியுள்ளதால் சபரிமலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சன்னிதானம், பம்பை, நிலக்கலில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுபோலேவே போராட்டம் நடத்துபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x