Last Updated : 24 Feb, 2019 06:57 PM

 

Published : 24 Feb 2019 06:57 PM
Last Updated : 24 Feb 2019 06:57 PM

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சட்டவிரோத குடியேறிகள் தூக்கி எறியப்படுவார்கள்: அமித் ஷா ஆவேசம்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் நாட்டை விட்டு தூக்கி எறியப்படுவார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

ஜம்முவில் விஜய் சங்கல்ப் சம்மேளன் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்தை துளி அளவும் பொறுத்துக்கொள்ளாது, அதில் சமரசம் செய்து கொள்ளாது. ஜம்மு காஷ்மீர் பகுதியை மேம்படுத்துவதற்காக ஏராளமான நிதியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒதுக்கி வருகிறது.

இதற்கு முன் இருந்த காங்கிரஸின் வாரிசு ஆட்சியாளர்கள், தேசிய மாநாட்டுக்கட்சி, பிடிபி ஆகியோர் தங்களின் சொந்த மேம்பாடு குறித்துதான் அக்கறையாக இருந்தார்கள். ஆனால், பாஜக வந்ததில் இருந்து, அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் மக்களை சென்றடைய முயற்சிகள் எடுத்து வருகிறது.

பாரதிய ஜன சங்க தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தனது வாழ்க்கையை நமக்காக தியாகம் செய்துள்ளார். புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்தியாகம் ஒருபோதும் வீண்போகாது. தீவிரவாதிகளுக்கு எதிராகவும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி காஷ்மீர் சூழல் குறித்து கேள்வி எழுப்புகிறார். நான் அவருக்கு ஒன்று சொல்கிறேன். உங்களுடைய தாத்தா ஜவஹர்லால் நேருதான், நீங்கள் காஷ்மீர் குறித்து இன்று நீங்கள் கேள்விகள் எழுப்ப காரணம். நம்முடைய படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு படைகளை கைப்பற்ற முயற்சித்தபோது, நேருதான் தடுத்தார். ஆனால், ஜம்மு காஷ்மீரைப் பொருத்தவரை இந்தியாவின் ஒருபகுதி என்று பாஜக தீர்மானித்துள்ளது.  இதை நம்மிடம் இருந்து யாரும் கைப்பற்ற முடியாது.

அசாம் மாநிலத்தில் மேற்கொண்டதுபோல், அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சட்டவிரோதமாக குடியேறிகள் நாட்டை விட்டு தூக்கி எறியப்படுவார்கள்

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x