Published : 21 Feb 2019 12:09 PM
Last Updated : 21 Feb 2019 12:09 PM

புல்வாமா தாக்குதல் நடந்த அன்று படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி; காங்கிரஸ் குற்றச்சாட்டு

புல்வாமா தாக்குதல் நடந்த அன்று பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் சரமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

தாக்குதல் நடைபெற்ற பிப்ரவரி 14-ம் தேதி உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் பூங்காவுக்குச் சென்றார் மோடி. இந்த மாதத்தின் கடைசியில் வெளியாகவுள்ள ஆவணப்படம் ஒன்றில், இமயமலைக்குச் சென்றபோது ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார். இதற்கான ஷூட்டிங் ஜிம் கார்பெட் பூங்காவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மோடியின் புகைப்படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

அங்கு ஹெலிகாப்டர் மூலம் காலை 7 மணிக்குச் சென்ற மோடி, மாலை வரை அங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ''புல்வாமா தாக்குதல் நடைபெற்ற அன்று மதியம், ஒட்டுமொத்த நாடே இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

ஆனால் பிரதமர் மோடியோ, ஜிம் கார்பெட் பூங்காவில் மாலை வரை படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இந்த உலகத்தில் இதுபோன்ற பிரதமர் எங்காவது இருப்பார்களா? உண்மையில் எனக்கு இதுகுறித்துப் பேச வார்த்தைகளே இல்லை.

எப்படித் தீவிரவாதிகளால் அத்தனை ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளைக் கொண்டு வரமுடிந்தது? தாக்குதலுக்கு 48 மணி நேரம் முன்பாகவே ஜெய்ஷ் இ முகமது காணொலி மூலம் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப்.8-ம் தேதி உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.  ஏன் இத்ககைய எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார் ரன்தீப் சுர்ஜேவாலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x