Published : 25 Feb 2019 11:21 AM
Last Updated : 25 Feb 2019 11:21 AM

உண்மைதான் என் பாதுகாப்புக் கவசம்: எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில் ஜாமீன் பெற்றார் பிரியா ரமணி

பாலியல் புகாருக்கு ஆளாகி பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிரியா ரமணிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மீ டு விவகாரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்தனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்த எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கில் பிரியா ரமணியை விசாரணைக்காக ஆஜராகுமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று ஆஜரான அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அத்துடன் பிணைத் தொகையாக ரூ.10,000 செலுத்தவும் உத்தரவிட்டது.

அடுத்த விசாரணை மார்ச் 8-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பிரியா ரமணி, ''ஏப்ரல் 10-ம் தேதி என் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைப்பர். அதற்குப் பிறகுதான் நடந்த சம்பவத்தை என்னால் கூற முடியும். இந்த வழக்கில் உண்மைதான் என்னுடைய பாதுகாப்புக் கவசமாக இருக்கும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x