Last Updated : 25 Feb, 2019 04:41 PM

 

Published : 25 Feb 2019 04:41 PM
Last Updated : 25 Feb 2019 04:41 PM

பிரதமர் மோடிக்கு புல்வாமா தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கும்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட உள்ள தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கும், ஆனால், வீரர்களின் சாவில் அரசியல் செய்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிக் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடந்தது. இதில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஆப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசும்,  பிரதமர் மோடியும் வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் செய்கிறார்கள். புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் தெரிந்திருக்கும்.

2,500 சிஆர்பிஎப் வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்லாமல், ஏன் சாலை மார்க்கமாக, பாதுகாப்பு வாகனங்கள் துணையின்றி அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன. எந்தவிதமான முறையான  பாதுகாப்பு சோதனைகளும் இன்றி பயணம் நடந்துள்ளது.

இந்த தாக்குதல் நடந்தபோது, பிரதமர் மோடி எங்கு இருந்தார்? இதுபோன்ற தாக்குதல் நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே உங்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிந்திருக்கும். முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது.

மத்திய அரசின் உளவுத்துறை இந்த தாக்குதல் குறித்து தகவல் அளித்திருக்கும். தகவல் அளித்திருக்கும் பட்சத்தில் ஏன் சிஆர்பிஎப் வீரர்கள் அனைவரையும் விமானம் மூலம் அழைத்துச் செல்லவில்லை. சிஆர்பிஎப் வீரர்கள் அழைத்துச்செல்லப்படும் சாலையில் முறையான பாதுகாப்பு சோதனைகள் ஏன் நடக்கவில்லை. நம்முடைய வீரர்களின் ரத்தத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.

உள்நாட்டில் பிரதமர் மோடியின் பாஜக கட்சி, போர் போன்ற சூழலை உருவாக்க முயன்று வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு அமைதியின் தூதுவர் விருது அளித்துள்ளார்கள்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்ய முயற்சிக்கும். குறிப்பாக மேற்கு வங்கத்தில் தங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்று முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேட்டைத் தவிர்க்கக் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் 3 பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பூத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, மின்னணு எந்திரங்கள், விவிபிஏடி எந்திரங்கள் பயன்பாடு, செயல்பாடு ஆகியவற்றை விளக்குவார்கள்

இந்த தேர்தலில் பாஜக மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய முயல்வார்கள். இதற்காக மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை அமர்த்தி இந்த பணியைச் செய்ய இருக்கிறார்கள் என அறிகிறேன். மூத்த தலைவர்கள் தினேஷ் திரிவேதி, சவுகதா ராய், பார்தா சாட்டர்ஜி ஆகியோர் இந்த குழுவில் இருப்பார்கள். மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்கவிடமாட்டோம்

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x