

மகாராஷ்டிராவில், காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த தகவல் உரிமை ஆர்வலரின் உடல் சிதைந்த நிலையில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் தகவல் உரிமைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாரதிய வித்யாபீட காவல் நிலையத்தின் மூத்த காவல் அதிகாரி தெரிவித்த விவரம்:
''புனே மாவட்டத்தின் முதா கிராமத்தில் உள்ள லாவாசா சாலையில் நேற்று மாலை (திங்கள்கிழமை) சிதைந்த உடல் ஒன்று கண்டறியப்பட்டது. பின்னர், இவ்வுடல் கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்த வினாயக் ஸ்ரீசாத் என்பவரின் உடல்தான் என்று அடையாளம் காணப்பட்டது.
ஸ்ரீசாந்த் என்பவர் ஒரு தகவல் உரிமை ஆர்வலர். இவர் கடந்த ஜனவரி 30-லிருந்து காணாமல் போனதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜனவரி 31 அன்று புகார் அளித்திருந்தனர்.
பின்னர் இவ்வழக்கு பிப்ரவரி 5 அன்று குடும்பத்தினர், நகரத்தின் சில பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளுக்கு எதிராக தகவல் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் கீழ் குரல் எழுப்பப்பட்டதால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று எழுப்பிய சந்தேகத்தின்பேரில் கடத்தல் வாக்காகப் பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீசாத்தின் குடும்பத்தினர் குறிப்பிடுகையில் கட்டுமான, ரியல் எஸ்டேட் துறைகளைச் சார்ந்த பல்வேறு ஆட்கள் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.
ஆனால், விசாரணையில் அவர்கள் அனைவரும் இறந்த ஸ்ரீசாத்துக்கு நெருக்கமான நண்பர்கள் என்று தெரியவந்துள்ளது''.
இவ்வாறு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இவ்வழக்கு தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை) மற்றும் 201 (குற்றத்திற்கான ஆதாரங்களை காணாமல் செய்தது) ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஸ்ரீசாத் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பின்புதான் அவர் எவ்வாறு இறந்தார் என்பதை அறிய முடியும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.