Last Updated : 22 Feb, 2019 07:37 PM

 

Published : 22 Feb 2019 07:37 PM
Last Updated : 22 Feb 2019 07:37 PM

பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிட்டால் 10% தள்ளுபடி- தேசபக்தியை நிரூபிக்க ஒரு முஸ்லிம் வியாபாரியின் முயற்சி

"நான் முதலில் ஓர் இந்தியன். மற்ற இந்தியர்களைப் போலவே எனது தேச வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படும்போது எனக்கும் கோபம் வருகிறது. என்னுடைய தேசப்பற்றும் மற்றவருடையது போலவே. அதை நிரூபிக்கவே இந்த முயற்சி" என்ற ஆழமான விளக்கத்தைக் கூறுகிறார் பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிடக் கோரும் முஸ்லிம் வியாபாரி ஒருவர்.

பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிட்டால் 10% தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறார் மகாராஷ்டிரா மாநிலம் கார்கர் பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் சயீத் கான்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில், தீவிரவாத தாக்குதல்களுக்கு தனது சமூகத்தையும் சேர்த்துக் குறைகூறுபவர்களுக்கு தேசபக்தியை நிரூபிக்க இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இந்த வியாபாரி.

காரக்பூரில் செக்டார் 7 பகுதியில் உள்ள லக்கி தவா எனும் உணவகத்தின் உரிமையாளர் சயீது கான், பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிட்டால் வாங்கும் உணவின் விலையில் 10% தள்ளுபடி தருவதாக அறிவித்திருக்கிறார்.

நேர்மறை எண்ணங்களைப் பரப்புங்கள்:

கடந்த புதன்கிழமையன்று இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் ஒரு வாரத்துக்கு இது நீடிக்கும் எனக் கூறும் கான், "புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் நாடே வெகுண்டெழுந்துள்ளது. எனக்கும் அதே எண்ணம்தான் அதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

என்னிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் ராணுவ நிதிக்கு என்னால் பணம் அனுப்ப இயலாது. அதனால், நானும் எனது ஊழியர்களும் வேறு வழிமுறைகள் குறித்து ஆலோசித்தோம்.

 செவ்வாய் இரவு எனது ஊழியர்கள் ஒரு யோசனையை முன்வைத்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை பாகிஸ்தான் ஒழிக எனக் கோஷமிடவைத்து நாட்டுக்கு நமது ஒற்றுமையை பறைசாற்றுவோம் என்றனர். அதேபோல் அவ்வாறு கோஷமிடுபவர்களுக்கு 10% தள்ளுபடியும் அறிவிக்கலாம் என்றனர். அதை செய்தோம். இந்த தள்ளுபடியால் எனக்கு பண நஷ்டம் ஏற்படலாம். ஆனால், என்னால் தேச ஒற்றுமை என்ற நேர்மறை எண்ணத்தை பரப்ப முடிகிறது" என்றார்.

அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பாகிஸ்தான் ஒழிக எனக் கோஷமிடுவதோடு சயீது கானுடன் ஒரு செல்ஃபியும் எடுத்துக் கொள்கின்றனர். கானும், பாகிஸ்தான் ஒழிக எனக் கோஷமிடும் வாடிக்கையாளர்கள் புகைப்படங்களை வீடியோக்களை எடுத்து அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார். இதனால், கடைக்கு கூட்டம் வருவது அதிகரித்துள்ளது.

இதை தேசபக்தியைப் பறைசாற்றும் முயற்சியாகவே அவர் பார்க்கிறார். ஆனால், சிலர் இப்படி ஒரு நாட்டை குறிப்பிட்டு கோஷமிடுவதில் விருப்பமில்லை எனக் கூறிச் சென்றுவிடுகின்றனராம். அவர்களுக்கு, தள்ளுபடி தரப்படுவதில்லை.

ஆவேசப்படும் கான்..

தீவிரவாதத்தை தனது மதத்துடன் தொடர்புபடுத்தி பேசுபவர்களை பலமுறை கான் சமூக ஊடகங்கள் வாயிலகாகக் கடிந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தீவிரவாதத்துக்கு எந்த மதமும் இல்லை.  எங்கு எந்த தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் தனது மதத்தை இழுத்துப் பேசுபவர்களால் வருத்தமடைவதாகக் கூறுகிறார். இதனாலேயே அவர் இத்தகைய முயற்சியை எடுத்ததாகவும் கூறுகிறார்.

நான் முதலில் ஓர் இந்தியன். மற்ற இந்தியவர்களைப் போலவே எனது தேச வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படும்போது எனக்கும் கோபம் வருகிறது. என்னுடைய தேசப்பற்றும் மற்றவருடையது போலவே என்று நிரூபிக்கவே இதை செய்ததாக கான் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x