பாலாகோட் தாக்குதல் குறித்து சர்ச்சையைக் கிளப்பும் மெஹபூபா

பாலாகோட் தாக்குதல் குறித்து சர்ச்சையைக் கிளப்பும் மெஹபூபா
Updated on
1 min read

பாலாகோட் தாக்குதல் குறித்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி சர்ச்சைக் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்துள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பாலோகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை தகர்த்ததை வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விமானப் படை இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுச் செயலர் கூறுகிறார். தீவிரவாதப் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ இதனை மறுத்துள்ளது. இந்திய விமானங்கள் அவசர அவசரமாகத் திரும்பியதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி கூறுகிறார். இரு தரப்பினரும் இலக்கும் நிறைவேறியது என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமர் அப்துல்லாவும் சர்ச்சைக்குரிய கருத்தையே தெரிவித்திருந்தார். அவரும் தனது ட்விட்டரில்,  ''பாலாகோட் முகாமில் நடந்தது குறித்து பாகிஸ்தான் தளபதிகள் பேசியுள்ளதை நாம் அறியாதவரை நாம் எதைத் தாக்கினோம் மற்றும் விமானத் தாக்குதலில் என்னவெல்லாம் அழிக்கப்பட்டது என நாம் எதையும் ஊகிக்க முடியாது" எனக் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த தேசமும் விமானப் படைக்கு பாராட்டுகளைக் குவித்துவரும் நிலையில் காஷ்மீரின் இரண்டு முன்னாள் முதல்வர்களின் கருத்தும் கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in