செல்லும் இடங்களில் எல்லாம் பொய்: பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி

செல்லும் இடங்களில் எல்லாம் பொய்: பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி
Updated on
1 min read

தான் செல்லும் இடங்களில் எல்லாம் வாக்குறுதி என்ற பெயரில் பொய்யாக பேசுகிறார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆந்திர பவனில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆந்திர மக்களுக்கும், மாநிலத்துக்கும் ஆதரவாக நான் இருப்பேன். ஆந்திர மக்களிடம் இருந்து பணத்தைத் திருடி, பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு கொடுத்திருக்கிறார். இதுதான் உண்மை.

என்ன மாதிரியான பிரதமர் இவர்? நரேந்திர மோடி எங்கு சென்று பேசினாலும் பொய்யாகப் பேசுகிறார். ஆந்திரா சென்றாலும் சிறப்பு அந்தஸ்து வழங்குகிறேன் எனப் பொய் பேசுகிறார். வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றால், அங்கு ஒரு பொய் பேசுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் சென்றால் அங்கு ஒருபொய் பேசுகிறார். முழுமையாக நம்பகத்தன்மையற்ற பிரதமராக இருக்கிறார் மோடி. ஆந்திர மாநிலத்துக்கு அளித்த வாக்குறுதியை மோடி நிறைவேற்ற வேண்டும்.

ஒருவிஷயத்தை நினைவில் கொள்ளலாம். இன்னும் சில மாதங்கள் மட்டுமே பிரதமர் பதவியில் மோடி இருப்பார். அதன்பின் மக்கள் அவர் மீது என்ன விதமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்திவிடுவார்கள்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இதற்கிடையே, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் தொடர்பாக 'தி இந்து' (ஆங்கிலம்) சார்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில், இந்தியா, பிரான்ஸ் நாடுகள் தொடர்புடைய ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அரசு சலுகைகளை, தள்ளுபடிகளை வழங்கியது. குறிப்பாக ஆய்வுக்குரிய விஷயங்களான ஊழலுக்கு எதிரான அபராதம், மூன்றாவது வங்கிக்கணக்கு மூலம் பணம் செலுத்துதல் பிரிவு போன்றவை கைவிடப்பட்டன. இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கையொப்பம் நடக்கும் முன் இந்தப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், " ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில், ஊழலுக்கு எதிரான அம்சம் இல்லை. நாட்டின் காவல்காரர் இந்திய விமானப்படையில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை அனில் அம்பானி திருடிக்கொள்ளக் கதவுகளை திறந்துவிட்டுள்ளார் " என குற்றம் சாட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in