

ஐதராபாத்தில் பிரபல நகைக்கடையில் வேலைசெய்துவந்த விற்பனை நிர்வாகி ஒருவர் ரூ.1 கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி நகைகளை அவ்வப்போது திருடிச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐதரபாத்தில் மிகப்பெரிய நகைக் கடையான ரைசன் ஜூவல்ஸ் பல்வேறு கடைகளுக்கு நகைகளை விநியோகிக்கும் முக்கியமான நிறுவனம். கடையின் விற்பனை நிர்வாகியாக கோதாவத் விவேக் ஜெயின் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவரே கடைகளுககு சென்று நகைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
நகைகளை விநியோகிப்பதில் படிப்படியாக கடை முதலாளியின் நம்பிக்கையை அவர் பெற்றிருந்தார்.
அதனால் என்ன நகைகள் கொண்டு செல்லப்பட்டன? அதற்கான பில்கள் எவ்வளவு வைக்கப்பட்டுள்ளன என்பதில் கூட அவர் மீதிருந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே கடைமுதலாளி கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் அவற்றை பரிசோதித்துப் பார்த்தபோது, நகை இருப்புகளுக்கும் பில்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்ததாகவும் பில்கள் அனைத்தும்போலி என்பதும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடை முதலாளி போலீஸாரிடம் ரகசியமாக புகார் அளித்தார்.
அவரிடமிருந்து அனைத்துத் தகவல்களையும் பெற்ற ஐதராபாத் போலீஸார் விற்பனை நிர்வாகியின் வீடு உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதிக்கு ரகசியமாக சென்றனர்.
கடை நிர்வாகியின் வீட்டில் பரிசோதனை செய்தனர். விவேக் ஜெயினின் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் 3 கிலோ 20 காரட், வைரத்தில் மட்டுமே 1 கோடிக்கும் அதிக மதிப்புமிக்க நகைகளையும் போலீஸார் கைப்பற்றினர்.
கோல்மாலில் ஈடுபட்ட நகைக் கடை நிர்வாகியை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.