

பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலாலும், வான்வெளியில் பாகிஸ்தான் விமானம் அத்துமீறியதாலும், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியில் உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ராணுவத்தினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர், உளவுத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்களில் வெடிகுண்டு வீசி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு கூறுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் பறந்த 2 இந்தியப் போர் விமானங்களைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும், விமானி ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தகவலைத் தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வருகிறது.
அதேசமயம், காஷ்மீர் ரஜவுரி பகுதியில் பறந்த பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சொந்தமான எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால், இருநாட்டு எல்லைப்பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது..
இதனால் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையினர், உளவுத்துறையினர் ஆகியோருக்கு உச்ச பட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவடங்களில் இருக்கும் அனைத்துப் பள்ளிக்கூடங்களும் தற்காலிகமாக மூட ராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், " எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதி அருகே அமைந்துள்ள ஜம்மு, ரஜவுரி, பூஞ்ச் மாவட்டங்களில்Kளில் நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். ஆனால், இன்று காலையிலிருந்து தாக்குதல்கள் நடக்கவில்லை.
இன்று காலை முதல் பாகிஸ்தான் ராணுவ விமானம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பறந்ததால் சுட்டுவீழத்தப்பட்டது இந்த பதற்றம் காரணமாக, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லைப்பகுதியிலும் உச்ச பட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தும்போது அதற்கு பதிலடி கொடுத்து வருகிறோம். பாகிஸ்தானுக்கு நேற்று இரவு ராணுவத்தினர் அளித்த பதில் தாக்குதலில் 5 பாகிஸ்தானிய நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தரப்பில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் " எனத் தெரிவித்தனர்.