

கங்கையில் புனித நீராடுவதால் மட்டும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி செய்த பாவங்கள் தீர்ந்து விடாது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு வந்த பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகருக்கு அவர் வருகை தந்தார். பின்னர் திரிவேணி சங்கமத்துக்குச் சென்ற பிரதமர் அங்கு புனித நீராடினார்.
பின்னர் அவர் துப்புரவுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, துப்புரவுத் தொழிலாளர்கள் 5 பேரின் பாதங்களை கழுவினார். ‘‘துப்புரவுத் தொழிலாளர்களின் சீரிய பணியால், பிரயாக்ராஜ் நகரம் தூய்மையாக விளங்குகிறது. இது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது’’ என்று அவர்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
ஆனால் பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பிரயாக் ராஜ் நகரில் கும்பமேளா நடந்து வரும் நிலையில், கங்கை திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடியுள்ளார். கடந்த தேர்தலில் போலி வாக்குறுதி அளித்த எதையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய பாவங்கள் தீரும் என அவர் எண்ணுகிறார். ஆனால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
ரூபாய் நோட்டு தடை, ஜிஎஸ்டியால் தங்கள் வாழ்க்கையை சீரழித்த பிரதமர் மோடியையும், பாஜகவையும் அவர்கள் மறக்க மாட்டார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஜாதிய வெறி, மதவாதம், ஆதிக்கவாதம், பாசிஸம் இது தான் பிரதமர் மோடியின் ஆட்சி. இந்த ஆட்சியால் சீரிழிந்த மக்கள் இதை எப்படி மறப்பார்கள்’’ எனக் கூறினார்.