Published : 21 Feb 2019 03:58 PM
Last Updated : 21 Feb 2019 03:58 PM

ஆந்திராவில் தூது விடும் பாஜக: தயக்கம் காட்டும் பவன் கல்யாண்

ஆந்திராவில் கூட்டணி அமைக்க பாஜக தலைவர்கள் தூதுவிடும் நிலையில் நடிகர் பவன் கல்யாண் அதனை ஏற்க தயக்கம் காட்டி வருவதா கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக பல மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்து வருகிறது. பிஹாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடனும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனும், தமிழகத்தில் அதிமுகவுடனும் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதுமட்டுமின்றி அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. சமீபத்தில் நடந்த தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் வரும் மக்களவைத்  தேர்தலில் தெலுங்குதேசத்துடன் கூட்டணி அமைக்கும் முடிவை கங்கிரஸ் கைவிட்டுள்ளது.

தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வலிமையுடன் திகழ்கிறது. அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக தலைவர்கள் முயற்சி செய்தபோதிலும், தனித்து போட்டியிடும் முடிவிலேயே ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் பாஜகவுக்கு வாக்கு வலிமை மிக குறைவாக இருப்பதால் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதையடுத்து நடிகர் பவன்குமார் தலைமையிலான ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜகவினர் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுவதால் பவன் கல்யானை முதல்வர் வேட்பாளராக முன்மொழியவும் பாஜக தயாராக இருப்பதாக தெரிகிறது. எனினும் பவன் கல்யாண் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். மத்திய அரசின் மீது உள்ள மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் பாஜகவுடன் கூட்டணி சேர அவர் தயக்கம் காட்டுகிறார்.

இதுமட்டுமின்றி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி மறுத்து விட்டதாக கூறி சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி அமைக்க பவன் கல்யாண் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x