

சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கில் விசாரணை நடத்திவரும் சிபிஐ அதிகாரிகள் முன் கொல்கத்தா போலீஸ் கமிஷனல் ராஜீவ் குமார் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு நம்பிக்கையான முறையில் ஒத்துழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த மேற்குவங்க போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார், முறையாக விசாரிக்கவில்லை என வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. விசாரணை ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தப் பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை. தற்போது கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனராக ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு ராஜீவ் குமார் இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், வீட்டு வாயிலில் பாதுகாப்பில் இருந்த கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒத்துழைக்க உத்தரவிடக்கோரியும், , கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்ற தர்ணா போராட்டத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்றதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் கோரி இருந்தனர்.
இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார்.
அதன்பின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பின்வருமாறு உத்ரவுகளை பிறப்பித்தார், அதில், " சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ முன் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு நம்பகத்தன்மையான முறையில் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த விசாரணை நடுநிலையான இடமான மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் நடக்க வேண்டும். இந்த விசாரணையின் போது கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராகக் கடினமான நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் ஏதும் சிபிஐ எடுக்கக் கூடாது.
இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வரும் 20-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், போராட்டத்தில் பங்கேற்றதுக்காக சிபிஐ தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுதொடர்பாக வரும் 18-ம் தேதிக்குள் மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆகியோர் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் வரும் 20-ம் தேதி இவர்கள் 3 பேரும் நேரில் ஆஜராக வேண்டுமா என்பது தெரிவிக்கப்படும் " எனத் தெரிவித்தனர்.