Published : 21 Feb 2019 08:15 PM
Last Updated : 21 Feb 2019 08:15 PM

பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரைத் தடுத்து நிறுத்த வேண்டும்: நிதின் கட்கரி திட்டவட்டம்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

 

சிந்து நதி நீர் ஓப்பந்தத்தின் படி ஜீலம், செனாப், சிந்து  ஆகிய நதிகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. அரபிக்கடலில் கலக்கும் வழியில் பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதியின் 80% நதிநீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் யுரி பயங்கரவாதத் தாக்குதலின் போதே இங்கிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரைத் தடுக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன.

 

இதனிடையே கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி  தற்கொலை தாக்குதல் நடத்தினான்.  இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

 

இந்தநிலையில், இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார். கிழக்கு பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டப்படும். பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து அதை யமுனை ஆற்றில் இணைப்பதால் யமுனை ஆற்றின் நீர்வளம் அதிகரிக்கும் என்றுஅவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x