

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நடந்து வரும் தேடுதல் வேட்டையில் உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த 14-ம் தேதி துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.
இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது, தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் கடும் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
காஷ்மீர் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ் - இ- முகமது தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்மாநில காவல்துறை அதிகாரி ஓ.பி.சிங் கூறியதாவது:
‘‘சஹரன்பூரில் நடந்த தேடுதல் வேட்டையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 2 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இருவரும் ஜெய்ஷ் -இ -முகமது இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும், காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருவரில் ஒருவரான ஷாநவாஸ் குல்காம் மாவட்டத்தையும், அக்விப் புல்வாமா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் உத்தர பிரதேசம் வந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்’’ எனக் கூறினார்.