

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-எ-முகமது தீவிரவாத அமைப்பு புதுமுகத்தைத் தேர்வு செய்தது. 350 கிலோ பயங்கர வெடிபொருட்களுடன் சிஆர்பிஎஃப் ஜவான் பேருந்தில் மோதிய தீவிரவாதி ஆதில் அகமது தார். இவருக்கு இன்னொரு பெயர் உண்டு ‘வக்காஸ் கமாண்டோ’ என்பதே அது. இவர் புல்வாமாவில் உள்ள கந்திபாக் கிராமத்தைச் சேர்ந்தவர்.
காவல்துறை பதிவேடுகளில் ஆதில் அமகது தார் பெயர் ‘சி’ பிரிவு தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பிரிவின் கீழ் ஒருசில தீவிரவாதத் தாக்குதல் வழக்குகள் பதிவு செய்யப்படும். ஏ++ பிரிவின் கீழ் வரும் தீவிரவாதிகள் மேல் அதிக வழக்குகள் பதிவாகியிருப்பது வழக்கம்.
ஆதில் அகமது தாரின் தந்தை குலாம் ஹசன் தார் தற்போது தன் இன்னொரு மகனுடன் வசித்து வருகிறார், அவர் கூறும்போது, “என் மகனை (ஆதில் அகமது தார்) பணிவான, உதவிபுரியக்கூடிய, உணர்வுபூர்வமானவனாகவே நான் என் நினைவில் கொண்டிருந்தேன். அவன் துணி வியாபாரம் செய்து வந்தான், அவனிடம் இப்படியொரு பக்கம் இருக்கும் என்ற சந்தேகம் எங்களுக்குக் கொஞ்சம் கூட இல்லை.
ஆதில் அகமது தார் தாக்குதலுக்கு முன்பு பேசி தாக்குதலுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வீடியோவில் இன்னும் இப்படிப்பட்ட தாக்குதல் நடக்கும் என்று ஐசி 814 கடத்தல், பதான்கோட் தாக்குதலைக் குறிப்ப்பிட்டு பேசியிருக்கிறார்.
பயங்கரவாதியான தாருக்கு 3 சகோதரர்கள், தார் 11ம் வகுப்பு படிப்பு முடிந்தவுடன் இஸ்லாமிய ஆய்வுகளில் சேர்ந்து படித்தார் என்றும், 2016-ல் காஷ்மீரை உலுக்கிய புர்ஹான் வானி கொலைக்குப் பிறகே தாரின் வாழ்க்கை மாறிவிட்டது என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். “போராட்டம் ஒன்றில் தாரின் காலில் தோட்டா பாய்ந்தது. 2016-ல் தாரின் உறவினரும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். இதனையடுத்தே காஷ்மீர் உரிமைகள் மீறல் என்றெல்லாம் அவர் பேசத் தொடங்கியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆதில் அகமது தார் மார்ச் 2018 முதல் மாயமானார். ஆனால் ஏப்ரலில் மீண்டும் சமூகவலைத்தளங்களின் மூலம் வெளியே தெரியவந்தார். அப்போது ஆயுதங்களுடன் அவர் இருந்தார்.
டிசம்பர் 30, 2017-ல் லெத்போராவில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடைய ஃபர்தீன் கண்டே என்பவருடன் ஆதில் அகமது தாருக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் ஜம்மு காஷ்மீர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.