

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி நாட்டில் 100 ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்குவதற்கு செயல் திட்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் தனியார் துறைக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பின், முதல் பொது பட்ஜெட் தாக் கல் செய்யப்பட்டது. அதில், ‘நாட்டில் 100 ஸ்மார்ட் சிட்டிக் கள் உருவாக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முக்கிய நகரங்களை முழு அளவில் மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டிக்களாக்குவதற்கு செயல் திட்டங்கள், வழிமுறைகள் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் ஷங்கர் அகர்வால், டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்குவதற்கான வழிமுறை கள் தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. 100 ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்குவது மிகப்பெரிய பணி. இதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர் அதற்கான செயல் திட்டங்கள் வெளியிடப்படும். இத்திட்டத் தின்படி ஒரே நேரத்தில் 100 ஸ்மார்ட் சிட்டிக்கள் உருவாக்கப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, தனியார் துறையினருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்பு கள் ஏற்படும். ஏற்கனவே உள்ள நகரங்கள்தான் ஸ்மார்ட் சிட்டிக்களாக மேம்படுத்தப்படும். எனினும் புதிதாக இத்திட்டத்தின் கீழ் இரண்டு மூன்று புதிய நகரங்களும் உருவாக்கப்படும்.
இத்திட்டத்துக்காக நில ஆர்ஜிதம் செய்வதில் சிக்கல் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நகர்ப்புறங்களில் இருக்கும் நிலத்தை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், நடைமுறைக்கு ஒத்து வராத பழைய சட்டங்களை நீக்கிவிட்டு, தற்காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆராயும்படி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, நடைமுறைக்கு ஒத்துவராத சட்டங்கள் நீக்கப்படும். மக்களுக்கு ஏற்ற மத்திய அரசாக செயல்பட வேண்டும் என்பதுதான் பிரதமரின் நோக்கம். அதற்கேற்ப எல்லா பழைய சட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.
கிராமங்களில் இருந்து நகரங் களுக்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65 சதவீதம் நகர்ப்புறங்களில் இருந்து வருகிறது. எனவே, நகர்ப்புறங் களில் கவனம் செலுத்தி, சிறந்த உள்கட்டமைப்புகள், வசதிகளை ஏற்படுத்தி ஸ்மார்ட் சிட்டிக்களை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இவ்வாறு நகர்ப்புற மேம் பாட்டுத் துறை செயலர் ஷங்கர் அகர்வால் கூறினார்.