

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகைத் திட்டம், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேசமயம், சாலையில் கால்நடைகளை அலையவிடுதலால் ஏற்பட்ட பிரச்சினை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த யுபிஎஸ் என்ற புரோக்கேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.75 ஆயிரம் கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
ஆனால், இந்தத் திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17 மட்டுமே மத்திய அரசு அளிக்கிறது என்று குற்றம் சாட்டின.
இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து சேர்ந்த யூபிஎஸ் நிறுவனம் மக்களவைக்கு முன்பாக கள ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நாட்டில் மோடிக்கு ஆதரவான அலை வீசியது. ஆனால், 2019-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் பிரச்சினைகள், தேவைகள்தான் பிரதானமாக இருக்கும்.
ஆனால், பிரதமர் பதவிக்குப் பொருத்தமான தலைவர் என்று மக்களிடம் கருத்துகள் கேட்டபோது, தேர்தல் முடிவில் வெற்றிபெறும் இடங்கள் பாஜகவுக்குக் குறைவாக இருந்தாலும், பிரதமர் மோடிக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது. மற்ற போட்டியாளர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு மோடியைக் காட்டிலும் செல்வாக்கு குறைவாகவே இருக்கிறது
ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெறும் இடங்கள் முதலில் கணிக்கப்பட்ட அளவு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. தொடக்கத்தில் பாஜக 220 இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டு, பின்னர் 200, 180 என்று குறைந்துள்ளது.
இந்த சூழலில், நாட்டில் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் திட்டம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று தெரிகிறது.
மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், ஆதரவற்று விடப்பட்டுள்ள கால்நடைகளால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இது அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கலாம்.
மேலும், நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், கிராமப் பொருளாதாரம் பாதிப்பு, பண மதிப்பிழப்பு, அரசு நிறுவனங்களை அதிகாரமிழக்கச் செய்தல் ஆகியவற்றைக் கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
அதேசமயம், பாஜக அரசு அறிவித்துள்ள சமூக நலத்திட்டங்களின் பயன்கள், சுகாதாரம், கிராமங்களில் மின்வசதி, அனைவருக்கும் வீடு, ஸ்வச் பாரத் திட்டம் உள்ளிட்டவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பிரச்சாரம் செய்வது பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.