அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் நிபந்தனையா? - உடனடியாக விடுதலை செய்ய இந்தியா வலியுறுத்தல்

அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் நிபந்தனையா? - உடனடியாக விடுதலை செய்ய இந்தியா வலியுறுத்தல்
Updated on
1 min read

பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுதலை செய்ய எந்த நிபந்தனையையும் ஏற்றுக் கொள்ள முடியாது, அவரை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.  அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்துள்ளது.

இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கியுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து அபிநந்தனை விடுவிக்க சில நிபந்தனைகளை விதிக்க பாகிஸ்தான் முயலுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெகமுத் குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய விமானியை திருப்பி ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அதேசமயம் மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என குரேஷி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அபிநந்தனை விடுவிப்பதற்காக வேறு எந்த நிபந்தனையையும் ஏற்க தயாரில்லை என இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது. நிபந்தனை ஏதும் இன்றி அபிநந்தனை விடுவிக்க வேண்டும், அதுவும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in