

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பிந்தைய சூழலை கூர்ந்து கவனித்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) பாலாகோட் தீவிரவாத முகாம்களை தாக்கி தகர்த்தது.
தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழலே நிலவுகிறது. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் அசோக் லவாஸாவிடம், ராணுவ நடவடிக்கைகளால் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அசோக் லவாஸா, "புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய சூழலையும், இந்திய விமானப்படையின் பதிலடிக்கு பிந்தைய சூழலையும் தேர்தல் ஆணையம் கூர்ந்து கவனித்து வருகிறது. ஆனால், இப்போதைக்கு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நாங்கள் எங்களது வேலையை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்" என்றார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்..
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மக்களவைத் தேர்தலில் ஆன்லைன் மூலமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தியை வதந்தி என்று புறந்தள்ளிய தேர்தல் ஆணையர் இதுபோன்ற வதந்திகளை வாக்காளர்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்காத முதன்முறை வாக்காளர்கள் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தங்களை பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.