Published : 26 Feb 2019 06:59 PM
Last Updated : 26 Feb 2019 06:59 PM

பாக் ராடாரில் சிக்காமல் சாகசம்: தீவிரவாதிகளை துவம்சம் செய்த  ‘மிராஜ் 2000’ போர் விமானம்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து ஜெய்ஷ் -இ-முகமது முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் மிராஜ் 2000 போர் விமானங்கள் பெரும் சாதனை புரிந்துள்ளன.  இவை மணிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து தாக்கும் திறன் கொண்டவை.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று  அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. பெரும் சாதனை படைத்துள்ள மிராஜ் 2000 போர் விமானங்கள் நீண்டகாலமாகவே இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மிராஜ் 2000 போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. உலகின் சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே இந்த விமானங்களை வைத்துள்ளன. 1970-ம் ஆண்டில் மிராஜ் 3 போர் விமானங்கள் அறிமுகமாகின. உலக அளவில் கிடைத்த வரவேற்பையடுத்து 2000 N, மிராஜ் 2000 D போன்ற தாக்குதல் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. இதில், மிராஜ் 2000-5 மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள் ஆகும்.

உலக அளவில் தற்போது 600க்கும் மேற்பட்ட மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் உள்ளன. உலகெங்கும் 9 நாடுகளில் மட்டுமே இந்த வகை விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

ராடாருக்கு சிக்காத தொழில்நுட்பம், உணர்வுக் கருவிகள், கணினி அமைப்புகள், மிகத் துல்லிமான இலக்கை குறிவைக்கும் திறன், தேவையான ஆயுதங்களை தாங்கிச் செல்லும் சக்தி ஆகியவை இவற்றின் சிறப்பு.

மிராஜ் 2000 அதிகபட்சம் 2,336 கிலோ மீட்டர் வேகத்திலும், 17,060 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியது. ஒரே நேரத்தில் 13,800 கிலோ வெடி பொருட்களை இந்த விமானத்தில் எடுத்துச் சென்று எதிரிகளைத் அழிக்க முடியும். இன்றைய தாக்குதலில் 1000 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களை மட்டும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மணிநேரத்தில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு வேகமாக பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது மிராஜ்.

இந்திய விமானப் படையில் மிராஜ் 2000 போர் விமானம் 1985-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. மிராஜ் 2000-க்கு வஜ்ரா என்ற பெயரை இந்திய அரசு சூட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x