

கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிரான எந்த கடும்நடவடிக்கை எடுக்கக்கூடாது, கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டு இருப்பது எனக்குக் கிடைத்த வெற்றி அல்ல, தேசத்துக்குக் கிடைத்ததாகும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க அவரின் இல்லத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, மத்திய அரசுக்கு எதிராகவும், சிபிஐ அமைப்புக்கு எதிராகவும் நேற்றுமுன்தினம் இரவு முதல் முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் முன் "ஜனநாயகத்தைக் காப்போம்" என்ற பெயரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.இந்தத் தர்ணா போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்களான பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜீவ்குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒத்துழைக்க வேண்டும், அதேசமயம், அவரைக் கடுமையாக நடத்தக்கூடாது, கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. தேசத்துக்குக் கிடைத்த வெற்றி. நாங்கள் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துவைக்கமாட்டோம் எனக் கூறவில்லை. இது அரசியல்பழிவாங்கல் நடவடிக்கை என எங்களுக்குத் தெரியும்.
நான் ராஜீவ்குமாருக்கு ஆதரவாக மட்டும் இங்கு போராட்டம் நடத்தவில்லை, லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்துகிறேன். சிபிஐ நடவடிக்கைக்குப் பின் சில கதைகள் இருக்கிறது. யாரும் மோடிக்கு எதிராகப் பேசக்கூடாது. ஒற்றுமையாக இருந்து போராடுவோம். நாங்கள் எப்போதும் சட்டத்தை மதிப்பளிக்கிறோம், சட்டத்தின்படி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.