

திரைப்பட படப்பிடிப்புகள் சிக்கலில்லாமல் நடைபெற இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒற்றை சாளர அனுமதியை வழங்கப்படுவதாக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்தார். இதனோடு திருட்டு விசிடியைத் தடுக்கவும் சட்டவிதிகள் இயற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் சினிமாத் துறையினருக்கு அளிக்கப்படும் சலுகை குறித்து நிதி அமைச்சர் கோயல் அறிவித்தார், அவர் கூறுகையில்,
‘‘சினிமா துறையானது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். இந்த பொழுதுபோக்குத்துறையை ஊக்கமளிக்கும் வகையில் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சுலபமாக நடைபெற இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை அனுமதி அளிக்கப்படும்.
இது முன்னர் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இச்சட்டத்தின்படி இப்போது இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் கிடைக்கப்பெறுகிறது,
புதிய பட்ஜெட்டில், திரைப்படத்துறையில் மலிந்துவரும் வீடியோ பைரசியை தடுக்க ஒளிப்பதிவு சட்டத்தின்படி இயற்றப்படும் சட்டவிரோத திரைப்பட திருட்டு கட்டுப்பாட்டு சட்ட விதிகளும் அடங்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.
படபிடிப்புக்கான பல்வேறு அரசு அனுமதிகளை ஒற்றை சாரள முறையில் எளிமையாக பெற முடியும். இதன்மூலம் நேரடியாக எந்த இடங்களுக்கும் அனுமதி கோரி காத்திருக்கவேண்டிய தேவையில்லை.