Published : 05 Feb 2019 04:13 PM
Last Updated : 05 Feb 2019 04:13 PM

உங்கள் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை: பாராட்டிய ராகுலின் மீது கட்கரி காட்டம்

பாஜகவில் கொஞ்சம் துணிச்சல் உள்ளவர் கட்கரி மட்டும்தான் என்று ராகுல் கூறியதற்கு, உங்களின் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை என நிதின் கட்கரி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தொண்டர்கள் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், “குடும்பத்தை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது” என்றார். இது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்பட்டதாக சில தரப்பினரால் கருதப்படுகிறது.

 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கட்கரிஜி வாழ்த்துகள். பாஜகவில் கொஞ்சம் துணிச்சல் உள்ளவர் நீங்கள் மட்டும்தான். ரஃபேல் ஊழல் மற்றும் அனில் அம்பானி விவகாரம், விவசாயிகளின் துயரம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் சீரழிவு ஆகியவை குறித்தும் நீங்கள் பேசவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

ராகுல் தனது பதிவுடன், ‘குடும்பத்தை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது’ என கட்கரி கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை இணைத்திருந்தார்.

 

இந்நிலையில், இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் விளக்கமளித்துள்ள கட்கரி, ''உங்களின் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை. ஆனால் ஒரு தேசியக் கட்சியின் தலைவர், ஊடகங்கள் தவறாகச் சித்தரித்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு எங்களின் அரசைத் தாக்குவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

 

அடுத்தவர்களை (ஊடகங்கள்) துணைக்கு அழைத்துக்கொண்டு நீங்கள் பேசுவதுதான் மோடியின் பலம்; எங்கள் அரசின் வலிமை.

 

ரஃபேல் ஊழல் மற்றும் அனில் அம்பானி விவகாரம், விவசாயிகளின் துயரம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் சீரழிவு ஆகியவை குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தீர்கள். அதற்குப் பதில் சொல்ல விரும்புகிறேன். ரஃபேல் விவகாரம் குறித்து அரசே தெளிவுபடுத்தி விட்டது.

 

உங்களின் (காங்கிரஸ்) கொள்கைகளால் நெருக்கடியில் தள்ளப்பட்ட  விவசாயிகள், மோடிஜியின் நேர்மையான கொள்கைகளால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.

 

மோடி பிரதமரானதைப் பொறுக்க முடியாத நீங்கள், சகிப்பின்மையோடு, மதிப்புவாய்ந்த அமைப்புகளை (சிபிஐ) குறிவைத்துத் தாக்குகிறீர்கள்2'' என்று கட்கரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x