Last Updated : 17 Feb, 2019 11:56 AM

 

Published : 17 Feb 2019 11:56 AM
Last Updated : 17 Feb 2019 11:56 AM

வர்த்தகரீதியான முதல் பயணத்தை தொடங்கியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்: டெல்லியில் இருந்து வாரணாசி புறப்பட்டது

நாட்டின் அதிவேகமான, பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக பயணத்தை இன்று தொடங்கியது.

டெல்லியில் இருந்து இன்று வாரணாசிக்கு புறப்பட்டுச் சென்றது. அடுத்த இரு வாரங்களுக்கு இந்த ரயிலின் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை தயாரித்தது. ரயிலில் இன்ஜின் இல்லாமல் அதிவேகமாக இயங்கக்கூடிய இந்த ரயிலுக்கு வந்தே பாரத் எனப் பெயரிபட்டது.

டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் தொடங்கியது.

டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக வாரணாசி சென்றடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்தது. அப்போது, டெல்லிக்கு முன்பாக 200 கி.மீ. தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் ரயில் பழுதடைந்து நின்றது. இந்தப் பழுதுக்கான காரணம் என்ன என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயிலை 40 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்க முடியாமல் நின்றது. மேலும், பெட்டிகளில் மின்சாரம் செல்வதிலும் தடை ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள், அதிகாரிகள், உள்ளிட்டோர் வேறு ரயிலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், ரயிலில் இருந்த பழுது நீக்கப்பட்டு இன்றுமுதல் தனது முதல் வர்த்தக பயணத்தை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கியது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று ஏற்பட்ட பழுது குறித்து ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், " வாரணாசியில் இருந்து டெல்லிக்கு வரும் வழியில் டுண்டுலா ரயில் நிலையத்துக்கு அருகே 18 கி.மீ தொலைவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது பழுது ஏற்பட்டது. ரயில் வரும்பாதையில் கால்நடை குறுக்கிட்டதால், பிரேக் போடப்பட்டது. அப்போது ரயிலில் பிரேக் பகுதியில் பழுது ஏற்பட்டது. அதன்பின் சரி செய்யப்பட்டது " எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது வர்த்தக ரீதியான முதல் பயணத்தை டெல்லியில் இருந்து காலை வாரணாசிக்கு புறப்பட்டது. அடுத்த இருவாரங்களுக்கு வந்தேபாரத் ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவெளியிட்டு ட்விட் செய்துள்ளார். அதில், " வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று தனது முதல் வர்த்தகப் பயணத்தை தொடங்கியது. அடுத்த இரு வாரங்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன." எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பழுது ஏற்பட்டது குறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். அதில், " மோடிஜி, மேட் இன் இந்தியா குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். இது தோல்வியில் முடிந்தது எனப் பெரும்பாலானவர்கள் உணர்கிறார்கள். இதை எவ்வாறு செய்வது என்று காங்கிரஸ் கட்சி சிந்திக்கும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் " எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பியூஷ் கோயல் ரீட்வீட் செய்து " இந்திய பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் கடின உழைப்பை தாக்கிப் பேசுவது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மனப்போக்கை மாற்றுங்கள். மேக் இன் இந்தியா வெற்றிகரமானது, கோடிக்கணக்கான இந்தியர்கள் வாழ்வு பெறுகிறார்கள். உங்கள் குடும்பம் 60 ஆண்டுகளாக என்ன சிந்தித்தது " எனத் தெரிவித்தார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x