

பாகிஸ்தான் தாக்குதலை விவரித்து இந்திய ராணுவத்தின் முப்படை அதிகாரிகளும் இன்று கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது விமானப்படை தாக்குதல் தொடர்பாக தவறான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும், எந்த ஒரு சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்துள்ளது.
இரு நாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் அதனைத் தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கியுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து அபிநந்தனை விடுவிக்க சில நிபந்தனைகளை விதிக்க பாகிஸ்தான் முயலுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை அறிவித்தார்.
இந்திய விமானப்படையின் முப்படைத்தளபதிகள் இன்று டெல்லியில் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது எல்லையில் நடந்த சம்பவங்களை விவரித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
''பாகிஸ்தான் விமானங்கள் எல்லையைத் தாண்டி அத்துமீறி தாக்குதல் நடத்தின. விமானப்படை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இந்திய நிலைகளைக் குறி வைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. எனினும் அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
அப்போது இந்திய விமானம் ஒன்று துரதிர்ஷ்டவசமாக தகர்க்கப்பட்டது. இந்திய விமானி பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். பாகிஸ்தான் படைகள் இல்லாத பகுதியில் தான் அவர் கீழே விழுந்துள்ளார். அதன் பிறகே பாகிஸ்தான் படைகள் அவரைக் கைது செய்துள்ளன. எனினும் அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. அவர் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது''.
இவ்வாறு முப்படைத் தளபதிகள் கூறியுள்ளனர்.